மக்களின் ஆதரவோடு தனிப்பெரும் கட்சியாக வந்திருக்கும் தவெகவை அவர்களின் விருப்பப்படி ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது மட்டும்தான் ஆளுநரின் வேலை. தவெக தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்கும். பெரும்பான்மை இல்லையேல், அதற்கடுத்தப்படியாக இருக்கும் கட்சி தங்களுக்கான வாய்ப்புகளை பார்த்து ஆட்சியமைக்கக் கோரலாம். இல்லையேல் 6 மாதத்தில் அடுத்த தேர்தலுக்கு செல்லலாம். எஸ்.ஆர்.பொம்மை தொடங்கி எடியூரப்பா வரைக்கும் பல முதல்வர்களின் விவகாரங்களில் நீதிமன்றமே இதை உறுதி செய்திருக்கிறது. அப்படியிருக்க இதையெல்லாம் விடுத்து தன் விருப்பத்துக்கு ஏற்ப எதை எதையோ சொல்லி கவர்னர் மாளிகையை சட்டமன்றமாக மாற்ற நினைப்பது மாநிலங்களின் அதிகாரத்தின் மீது நிகழ்த்தப்படும் அராஜகம். லோக் பவன் என பெயர் வைத்துவிட்டதாலேயே கவர்னர் மாளிகைகள் மக்கள் மன்றங்களாக மாறிவிடுமா?

அர்லேக்கரின் அதிகாரத்தை மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட்டுகள் போன்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால், மற்ற கட்சிகள் இந்த விவகாரத்தை சந்தர்ப்பவாதத்தோடும் கயமைத்தனத்தோடும் அணுகுகின்றனர். குறிப்பாக, இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஆளுநரின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவிடம் எந்த ரியாக்சனும் இல்லை. திமுக ‘ஆளுநர் கூறுவதை ஏற்கிறோம்’ என்கிறோம். ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய கட்சி இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க குயுக்தியோடு காத்திருக்கிறது.
ஆளுநரும் சரி ஆளுநரின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்ப்பவர்களும் சரி, நீங்கள் செய்து கொண்டிருப்பது ஜனநாயகப் படுகொலை. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!