இதயத் தமனி நோய் (Coronary Artery Disease), பக்கவாதம் (Stroke) அல்லது ஸ்டென்ட் (Stent) வைக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்க இந்த மருந்துகள் அத்தியாவசியமானவை. இவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் மருத்துவர் கீழ்க்காணும் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அது சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நலம், வயது, இதயநோய் பாதிப்பின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.
டிகாக்ரிலர் (Ticagrelor) அல்லது பிராசுக்ரல் (Prasugrel):
இவை குளோபிடோக்ரல் போலவே செயல்படும் மருந்துகள் என்றாலும், அவற்றின் வேதி அமைப்பு (Chemical structure) மாறுபட்டது. குறிப்பாக, டிகாக்ரிலர் மருந்து குளோபிடோக்ரலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால், இதற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

சிலோஸ்டாசோல் (Cilostazol):
இது ஆஸ்பிரின் அல்லது குளோபிடோக்ரல் குடும்பத்தைச் சாராத தனித்துவமான ஒரு மருந்து (PDE3 inhibitor). தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுக்க, இது சில நேரங்களில் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர, தேவையைப் பொறுத்து டிக்ளோபிடின் ( Ticlopidine) என்ற இன்னொரு மாற்று மருந்தையும் மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, மருந்து ஒவ்வாமை இருப்பதாக உணர்ந்தால், நீங்களாக எந்த முடிவுக்கும் வராமல், மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.