இடைத்தேர்தல் ரேஸ் : உங்க விஜய்…நான் வரேன் ! பிரச்சார களத்தில் மீண்டும் விஜய் ! – Kumudam

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுவதால், தொகுதிகளில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது.

மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் :

மதுராந்தகம் தனித் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தொழுப்பேடு, ஆத்தூர் அருகே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து பிரசார பயணம் :

விஜய்யின் பிரசாரப் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புறப்படும் விஜய், பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், ஈசூர் – பூதூர், மதுராந்தகம் வழியாக பயணித்து அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பிரசார மைதானத்தை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யை வரவேற்கும் வகையில் வழித்தடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் :

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காவல்துறை விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. QR குறியீடு கொண்ட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அனுமதி வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்து வருவதால், இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *