TN Assembly: நீக்க மறுத்த சபாநாயகர்.. தூக்கிச் சென்ற காவலர்கள்! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரின் போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குத் தனது தீர்ப்பை வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சரின் பதிலுரையில் இடம்பெற்ற எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டுத் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர், “இது பொதுக்கூட்ட மேடையோ அல்லது உங்கள் கட்சியின் கூட்டமோ அல்ல. அவையின் மாண்பைக் குறைக்கும் நோக்கத்திலும், பேரவை நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்திலுமே திமுக உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்” என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும், திமுக கொறடா எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு ஆகியோர் பேச அனுமதி தருவதாகவும் சபாநாயகர் பலமுறை முறையிட்டார்.

சபாநாயகர் பேச்சுக்குச் செவிசாய்க்காமல் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால், அவை முன்னவர் செங்கோட்டையன் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற வலியுறுத்தினார். சபாநாயகர் மீண்டும் மீண்டும் திமுகவினரைத் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டும் அமளி ஓயவில்லை. இதனால் சபாநாயகரின் உத்தரவின்பேரில், அவைக் காவலர்கள் தலையிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக உறுப்பினர் எ.வ.வேலு தெரிவிக்கையில், “மிசா காலகட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சிறந்த நடிகரான அவர், அதற்கான உடல்மொழியுடன் தவறான தகவல்களைப் பேரவையில் பதிவு செய்துள்ளார். டெல்லியில் முரசொலிமாறனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதல்வர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?

தமிழகத்தில் நடைபெற்றுள்ள 550 குற்றச்சம்பவங்கள் மற்றும் 200 கொலைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், திட்டமிட்டுச் சட்டமன்ற விதிகளை மீறி நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளைப் பேரவையில் வாசித்துள்ளார். இது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது” எனக் கடுமையாகச் சாடினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *