இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக்கொண்டிருப்பவர்கள், உடற்பயிற்சிகள் செய்யலாமா? | “Can people with a heart stent exercise?

Spread the love

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு எல்லாம் நலம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. வாழ்க்கைமுறையில் முக்கியமாக சில மாற்றங்களைப் பின்பற்றியே தீர வேண்டும். 
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேர தொந்தரவில்லாத உறக்கம் கண்டிப்பாகத் தேவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

சிகிச்சை கையிலோ அல்லது காலிலோ மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்தப் பகுதியில் காயம் ஆறும் வரை தீவிர உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ ஆலோசனையோடு ஆரம்பத்தில்  5 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே  மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடற்பயிற்சியின் நேரத்தை மெதுவாக அதிகரிக்கலாம். முதலில் 10 முதல் 15 நிமிடங்கள் செய்து, படிப்படியாக 4 முதல் 5 வாரங்களில் 30 முதல் 35 நிமிடங்கள் வரை உயர்த்தலாம்.

உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் முதல் 5 முதல் 10 நிமிடங்கள் பொறுமையாக உடலைத் தயார்படுத்தும் வார்ம்-அப் (Warm-up) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்து 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம். கடைசி 5 முதல் 10 நிமிடங்கள் பொறுமையாக மற்ற உடற்பயிற்சிகளைச் செய்து உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

வாரத்திற்கு 4 முதல் 5 முறை  உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தசைகளை வலுவூட்டும் (Muscle Strengthening)  பயிற்சிகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யலாம். ஆனால், அதிக எடையுள்ள பளு தூக்கும் பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கார்டியாக் ரிஹாபிலிட்டேஷன் (Cardiac Rehabilitation) என்பது மாரடைப்பு (Heart Attack), இதய அறுவை சிகிச்சை (Bypass / Angioplasty) அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக மீண்டு வரவும், அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வழங்கப்படும் ஒரு மருத்துவ மறுவாழ்வு திட்டமாகும்.

இதில் மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்  

4 முதல் 6 வாரங்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இவற்றைப் பின்பற்றிய பிறகு, வீட்டிலேயே சுயமாக உடற்பயிற்சி செய்வதே சரியான முறை. உடற்பயிற்சியின் போது திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.

டாக்டர் அனந்தராமன்:

சென்னை, காவேரி மருத்துவமனையில் சீனியர் இதயநோய் சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 22 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *