இதுக்கும் திமுக தான் காரணம்… மீனாட்சியம்மன் கோயில் விஐபி பாஸ் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்! – Kumudam

Spread the love

குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கான அனுமதி, விஐபிகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது விஐபி பாஸ் விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தர்களில் சிலர், வழக்கமான அளவுக்கு கூட்டம் இல்லை என்றும், பாஸ் வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். விழாவுக்கான ஏற்பாடுகளும் எதிர்பார்த்த அளவில் இல்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதிலும், குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் மீது தெளிக்கப்படும் புனிதநீர் முறையாக வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது. மாநகராட்சி குழாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, போலீசார் டம்ளர் மூலம் பக்தர்களுக்கு ஊற்றியதாக சிலர் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, விஐபி பாஸ் விவகாரம் பெரும் சர்ச்சையானது. ஆர்எஸ்எஸ் மற்றும் தவெகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், விஐபி பாஸ்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர். இதனால், “பாஸ் வழங்கியது யார்?” என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். “மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான விஐபி பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், பாஸ் என்ன நிறத்தில் இருக்கிறது என்பதே விழாவுக்கு முந்தைய நாளில்தான் தனக்குத் தெரியவந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல், தனது குடும்பத்தினர்கூட குடமுழுக்கு விழாவுக்கு வரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விஐபி பாஸ்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து அறநிலையத்துறையே முடிவு செய்ததாகவும், அந்த விவகாரத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த சிலரே பிரச்சனையை கிளப்பியதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்பான புகார் குறித்த கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார். தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்ததாக கூறப்படும் புகார் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுவதையும் மறுத்த அமைச்சர், “தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை” என்றும் தெரிவித்தார்.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நிறைவடைந்துள்ள நிலையில், விஐபி பாஸ் முதல் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் வரை எழுந்துள்ள புகார்கள் மற்றும் அமைச்சர் அளித்துள்ள விளக்கம் என மதுரை அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *