Last Updated:
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் தனது வீட்டில் அரசு பேருந்து வடிவில் குடிநீர் தொட்டி அமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விழுப்புரம் நகரில் அரசு பேருந்து வடிவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், தாம் பணியாற்றிய துறையின் மீது கொண்டிருந்த அன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருப்பது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
விழுப்புரம் நகரின் ரஹமத் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சுமார் 30 ஆண்டுகளாக விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி, கடந்த 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அரசு பேருந்துகள் மீது கொண்டிருந்த பாசம் குறையவில்லை. இதனால் தனது வீட்டின் மாடியில் அமைக்கப்படும் குடிநீர் தொட்டியை அரசு பேருந்து வடிவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் செல்வராஜுக்கு தோன்றியது. இதுகுறித்து அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனிடம் கூறியபோது, “அப்படியே கட்டிக்கொள்ளுங்கள்” என அவர் உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, புதியதாக கட்டிய வீட்டின் மாடியில் அரசு பேருந்தை போலவே வடிவமைக்கப்பட்ட மேல்நீர்த் தேக்கத் தொட்டியை அமைத்துள்ளார். தினமும் அந்த டேங்க்கை பார்க்கும் போதெல்லாம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய கால நினைவுகள் மனதில் தோன்றுவதாக செல்வராஜ் உருக்கமாக தெரிவிக்கிறார்.
மேலும், விழுப்புரம் – சென்னை சாலை மேம்பாலப் பகுதியில் இருந்து இந்த வீடு தென்படுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நின்று பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், “மாலை நேரத்தில் மாடிக்குச் சென்று இந்த டேங்க்கை தொட்டு பார்க்கும் போது ஒரு விதமான மன நிறைவு கிடைக்கிறது. நான் வேலை செய்த காலத்தின் நினைவுகளை அது தினமும் நினைவூட்டுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.