பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்றிரவு சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து, நாளை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் விஜய்யுடன் பொறுப்பேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களில் ஆனந்தை தவிர வேறு யாரும் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.
“போஸ்டர் ஒட்டியவனுக்குதான் பதவி’ என ஆனந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பல மேடைகளில் பேசியிருக்கின்றனர். முதல் சுற்றில் அப்படியான எம்.எல்.ஏக்களுக்கு இடம் கொடுக்கப்படாததால், நாளை வெளியாகும் அமைச்சரவை பட்டியலில் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலரை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
குறிப்பாக, கட்சிக்குள் ஆனந்துக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் அறந்தாங்கி பர்வேஸ், சேலம் பார்த்திபன், கல்லானை போன்றோரை அமைச்சரவையில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
இஸ்லாமியர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்காததால், அதை மனதில் வைத்து பர்வேஸின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது என கட்சி வட்டாரத்தில் தகவல். அறந்தாங்கி பர்வேஸின் ஆதரவாளர்கள் ‘அண்ணன் அமைச்சர் ஆகுறாரு!’ என 10 நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.