இது மன்னராட்சி இல்லை, மனசாட்சியுடைய மக்களாட்சி: சட்டசபையில் திமுகவை மறைமுகமாக சாடிய முதல்வர் விஜய்  – Kumudam

Spread the love

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதல்வர் விஜய் பேசுகையில்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முதலமைச்சர் விஜய் பதில் உரை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதில் உரை கொடுத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், மாபெரும் தலைவர்கள் வழிநடத்திய மாண்பும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்த சட்டமன்றத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த என் நெஞ்சில் நிரந்தரமாக குடியிருக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தனது உரையை தொடங்கினார்.

எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நிரூபிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி. சூட்டிங்கில் இருந்து நேராக முதலமைச்சர் ஆன மாதிரி பேசுறாங்க. அது ரீல் தான் ரியல் கிடையாது. நம்ம கேரியரில் மேல வந்ததுக்கு விஜய் மட்டுமே காரணமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும், அரவணைப்பும் தான் காரணம். கடவுளுக்கும், கடவுளுக்கு சமமான தமிழக மக்களுக்கு நன்றி.

ஒரே ஒரு குடும்பம் மட்டும் முக்கியம்னு சொல்வது நம் ஆட்சியல்ல. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். 2026 தேர்தலில் மதத்தை, சாதியை, காசு கொடுத்து வாக்குகள் வாங்கும் நச்சு கலாச்சாரத்தை உடைத்துள்ளோம். இப்பவும் சொல்றோம் இது வெறும் ஆரம்பம் தான். மக்களே நமக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவி கொட்டி உள்ளது. 

இதனை கட்டுப்படுத்தியிருக்க வேண்டியது யார்? இதனை ஆரம்ப நிலையிலேயே ஏன் கட்டுப்படுத்தவில்லை? மனசாட்சி உள்ளவர்களுக்கு ஏன் பிரச்னை நடக்கிறது என்பது அவர்களுக்கே தெரியும்? இது மன்னராட்சி இல்லை, மனசாட்சியுடைய மக்களாட்சி என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசிய போது டாஸ்மாக் கட்சி நிதி என்று பேசியதும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் அவர்களுக்கு முதல்வர் பேசி முடித்த உடன் எதிர்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்குகிறோம் என்றார். ஆனால் எதிர்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். 

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் எதிர்கட்சியினர் மீதான தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேச தொடங்கினார், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம். தொடவும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம் என்றதும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *