அதேபோல், பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாத ஐரோப்பியத் தனிமனித வாதத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, எந்தவொரு அவசரக் காலத்திலும் ஓடிவந்து உதவும் பாதுகாப்பான சூழலைத் தருவதாகப் பாராட்டியுள்ளார்.
அடுத்ததாக, இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட தூய்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐரோப்பாவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளும், உணவகச் சாப்பாடும் கலாச்சாரமாக மாறிவிட்ட நிலையில், இந்தியாவில் இன்றும் தினந்தோறும் வீடுகளில் புதியதாகச் சமைத்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மாறாமல் உள்ளது.
இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பைத் தக்கவைக்கவும் உதவுகிறது; இதனுடன் சேர்த்து, இந்தியர்களின் தனிப்பட்ட சுத்தப் பழக்கவழக்கங்களும் மேற்கத்தியர்கள் கண்டிப்பாகப் பழக வேண்டிய ஒன்று என அவர் வலியுறுத்துகிறார்.
இறுதியாக அவர் குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம், “சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காணும் குணம்’ ஆகும். ஐரோப்பிய மக்கள் தங்களது வாழ்க்கையை அனுபவிக்கப் பெரும் பணத்தையும் ஆடம்பரமான விடுமுறைகளையும் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் மிகச் சிறிய தருணங்களிலும், எளிய பண்டிகைகளிலும் எவ்விதப் ஆடம்பரமுமின்றி மனதாரக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
கிராமப்புற இந்தியாவின் இந்த எளிய முறையை ஐரோப்பா கற்றுக்கொண்டால் மட்டுமே அங்குள்ள மக்களின் மன அழுத்தம் குறையும் என்று மோனிகா தனது பதிவில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.