இந்தியா சுற்றுப்பயணம் மிஸ்ஸிங்! ₹627 கோடி நிதி இழப்பு நெருக்கடியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!| England Cricket Board Faces ₹627 Crore Loss After India Tour Miss

Spread the love

2027-ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு (ECB) நிதி ரீதியாகச் சவாலான ஆண்டாக அமையப்போகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதது ஒருபுறம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC வருவாய்ப் பகிர்வில் மாற்றம் செய்திருப்பது மறுபுறம் என இரண்டு காரணங்களால் சுமார் 50 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ₹627 கோடி) வரை இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இல்லாததால் வருவாய் இழப்பு!

இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடும்போது கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பர வருவாயின் மதிப்பை அதிகரிக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் ECB-யின் முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளன. ஆனால், 2027-ம் ஆண்டு இந்திய அணியின் சுற்றுப்பயணம் திட்டமிடப்படவில்லை. அந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றாலும், இந்திய அணியின் வருகை இல்லாததால் ஏற்படும் வருவாய் இடைவெளியை ஈடுசெய்வது சவாலாகியுள்ளது.

ICC முடிவால் கூடுதல் சிக்கல்!

2028-ம் ஆண்டு தொடங்கவுள்ள அடுத்த வணிகச் சுழற்சியில் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருவாய் குறையலாம் என ICC எதிர்பார்க்கிறது. இதைச் சமாளிக்க, 2027-ல் உறுப்பினர் நாடுகளுக்கு வழங்க வேண்டிய ஒளிபரப்பு வருவாயில் ஒரு பகுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதன் பாதிப்பு இங்கிலாந்துக்கு மட்டுமல்லாமல் ICC-யின் 12 முழு உறுப்பினர் நாடுகளுக்கும் இருக்கும். எனினும், எவ்வளவு தொகை நிறுத்தி வைக்கப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, 2027-ம் ஆண்டு ஆண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் ஆண்டாகும். ICC-யின் முக்கியமான வணிகப் போட்டியான உலகக்கோப்பை நடைபெறும் ஆண்டிலேயே வருவாய்ப் பகிர்வில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *