பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திமுக – விசிக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும், தேவையற்ற வதந்திகளுக்கு விசிக தோழர்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்து, அதைத் தவிர்க்குமாறு நான் முன்னரே அறிவுறுத்தியிருந்தேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தகவல் சரியாகப் போய்ச் சேராததால் சில வி.சி.க தோழர்களும், அதேபோல தி.மு.க-வினரும் அங்கே கூடியுள்ளனர்.

இதனாலேயே இந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. இனிவரும் காலங்களில் நமது இயக்கத் தோழர்கள் இதுபோன்ற மோதல்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைபவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கவுமே இடதுசாரிகளுடன் இணைந்து வி.சி.க இந்த ஆட்சிக்கு ஆதரவளித்தது.