International
oi-Vigneshkumar
டெல் அவிவ்: கடந்த இரு நாட்களாகவே ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த களேபரம் குறித்தே உலகமே விவாதித்து வருகிறது. அப்போது விமானத்தில் நடந்த 5 முக்கியமான விஷயங்கள் தான் 174 பயணிகள் உயிரை காப்பாற்றியதோடு விமானத்தையும் பத்திரமாக தரையிறக்கியுள்ளது. நடுவானில் நடந்த அந்த 5 விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
இஸ்ரேல் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம், 174 பயணிகளையும் பெரும் ஆபத்தில் சிக்க வைத்தது. காக்பிட்டுக்குள் கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்ட நிலையில், விமானம் சுமார் 17,000 அடி உயரம் திடீரென சரிந்தது. அப்போது விமானத்தை கட்டுப்படுத்தும் போராட்டம், காக்பிட்டுக்குள் நடந்த தாக்குதல் என அடுத்தடுத்து பல திடுக் சம்பவங்கள் நடந்துள்ளன.

1. படுகாயத்திலும் காக்பிட் கதவை திறந்த கேப்டன்
இந்த சம்பவத்தில் மிக முக்கியமான முதல் திருப்பமே கேப்டன் ஸ்மித் மச்சார் செய்த இந்த ஒரு செயல் தான். துணை விமானியால் பலமுறை தாக்கப்பட்டு, அதிகளவு ரத்தத்தை இழந்த நிலையில் காக்பிட் தரையில் விழுந்திருந்தபோதிலும், மச்சார் தனது கடைசி சக்தியை பயன்படுத்தி காக்பிட் கதவை திறந்தார். பொதுவாக பயணிகள் இருக்கும் பகுதியில் இருந்து காக்பிட்டுக்குள் யாரும் நுழைய முடியாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஸ்மித் மச்சார் அதை உள்ளிருந்து திறந்ததால், பயணிகள் உள்ளே சென்று துணை விமானியை லாக் செய்ய முடிந்தது.
2. காக்பிட்டுக்குள் பாய்ந்த பயணிகள்
கதவு திறந்ததும் நான்கு பயணிகள் நொடியும் தாமதிக்காமல் உடனடியாக காக்பிட்டுக்குள் சென்றனர். இஸ்ரேலை சேர்ந்த பிளம்பர் யானிவ் ஹயூன், பல் மருத்துவர் டாக்டர் ஷோட்டா முசாயேவ், காப்பீட்டு நிறுவன உரிமையாளர் அசாஃப் ராஜுவான், வங்கி ஊழியர் ஸ்விகா மேனஸ் ஆகியோர் துணை விமானியை கட்டுப்படுத்தினர். விமானத்தில் வழங்கப்பட்ட ஹெட்போன் ஒயர் மூலமாகவே பைலட்டை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே நேரத்தில் ஸ்மித் மச்சார் அதிகளவு ரத்தத்தை இழந்திருந்ததால், டாக்டர் முசாயேவ் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி காப்பாற்றினார். பயணிகளும் துரிதமாகச் செயல்படவில்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும்.
3. விமானத்தை இயக்கியது ஒரு பிளம்பர்!
காக்பிட்டுக்குள் நுழைந்த யானிவ் ஹயூன் விமானி கிடையாது. அவர் ஒரு பிளம்பர். ஆனால் விமானம் வேகமாக கீழிறங்கி கொண்டிருப்பதை பார்த்த அவர், கண்ட்ரோலரை மேல்நோக்கி இழுக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். விமான விபத்துகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்ததால் விமானத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஓரளவு தெரிந்திருந்ததாக அவர் கூறியுள்ளார். அவர் செய்த காரியமே விமானம் வேகமாக சரிவதை நிறுத்தியுள்ளது.
4. ஓய்வு விமானிகள்
இதற்கிடையே நடந்த மற்றொரு முக்கியமான சம்பவம், அந்த விமானத்தில் இரண்டு ரெஸ்ட் ஃப்ளைதுபாய் விமானிகள் பயணித்து கொண்டிருந்ததுதான். இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பிறகு அவர்கள் காக்பிட்டுக்குள் சென்று விமானத்தை பத்திரமாக சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். அந்த இரண்டு விமானிகளும் அன்றைய விமானத்தில் பயணிகளாக இருந்தது தற்செயலா அல்லது மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் காரணமாக நியமிக்கப்பட்டு இருந்தார்களா என்பதில் தெளிவு இல்லை.
5. பத்திரமாக தரையிறங்கிய விமானம்
இந்த களேபரத்தின்போது விமானம் சுமார் 17,000 அடி வரை வெறும் சில நொடிகளில் வேகமாக கீழிறங்கியதுடன், அதன் பின்புற வால் பகுதியில் திசைமாற்றி கடுமையாக சேதமடைந்தது. ஆனாலும், எப்படியோ விமானம் தபுக்கில் பத்திரமாக தரையிறங்கியது.
இந்த ஐந்தில் எதாவது ஒரு விஷயம் சொதப்பி இருந்தாலும் கூட நாம் மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். ஒரே நேரத்தில் நடந்த இந்த ஐந்து முக்கியமான விஷயங்கள் தான் மிக பெரிய விமான விபத்தை தடுத்து, 174 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது.

