தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

Spread the love

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். இதில் ஷில்லாங் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. மேகாலயா உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று சோனமுக்கு வழங்கிய ஜாமீனை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சுப்ரீம் கோர்ட் சில அதிருப்திகளை வெளிப்படுத்திய போதிலும், சோனம் ஏற்கெனவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி, அதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தைக் கவனிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும், இது தொடர்பாக சோனமுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின் போது, மேகாலயா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புனே மலையில் இருந்து வருங்கால கணவனை பெண் ஒருவர் தள்ளிவிட்டுக் கொலை செய்ததையும் சுட்டிக்காட்டினார். சோனமுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையான தன்மை கொண்டவை என்றும், தொழில்நுட்பக் காரணங்களை முன்னிறுத்தி அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி, தனது கணவர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர்களுக்கு கடந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் நடந்தது, பின்னர் அவர்கள் மே 20 அன்று மேகாலயாவின் சோஹ்ரா (செராபுஞ்சி) பகுதிக்கு தேனிலவு சென்றனர். மூன்று நாள்களுக்குப் பிறகு தம்பதியினர் திடீரென மாயமாகினர், பின்னர் ஜூன் 2 அன்று ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *