இந்த இன்சுலினை 18 வயதிற்கு மேற்பட்ட டைப்-2 (Type 2) மற்றும் டைப்-1 (Type 1) சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கலாம். இப்போதைக்கு கர்ப்பிணிகளுக்கும், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் இந்த இன்சுலினுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
தினமும் ஊசி போடுபவர்கள் மாதத்திற்கு 30 ஊசிகள் போட வேண்டும். ஆனால், இது வாரத்திற்கு ஒன்று என்பதால், மாதத்திற்கு 4 அல்லது 5 ஊசிகள் போட்டால் போதுமானது.
இதுவே இதன் நன்மையாக இருந்தாலும், இந்த மருந்தின் குறைபாடும் இதுதான். ஒரு நோயாளி ஏதேனும் ஒரு காரணத்திற்காக திடீரென சாப்பிடாமல் இருக்கிறார் என்றால், அந்நிலையிலும் இந்த மருந்து உடலில் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கும். நோயாளி சாப்பிட்டாரா இல்லையா என்பதையெல்லாம் அது கணக்கில் கொள்ளாது. இதனால் சாப்பிடாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும்.

எனவே, நோயாளி ஒரே நேரத்தில், சீரான உணவு முறையைப் பின்பற்றி வந்தால் இந்த இன்சுலின், சர்க்கரை அளவைச் சரியாகக் கட்டுக்குள் வைக்கும். ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலோ, அல்லது ஏதேனும் மருத்துவப் பரிசோதனை, ஸ்கேன் அல்லது அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாப்பிடாமல் இருக்க நேரிட்டாலோ, சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
அதுபோன்ற சூழலில், ‘நான் வாராந்தர இன்சுலின் எடுத்துக்கொள்கிறேன்’ என்று மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால், மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
மற்றபடி இந்த இன்சுலின் பாதுகாப்பானது, வசதியானது மற்றும் நோயாளிக்கு மிகுந்த சௌகர்யத்தைத் தரக்கூடியது. நீங்களாக இந்த வாராந்தர இன்சுலினுக்கு மாறாமல், இது குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு பிறகு முடிவெடுப்பதுதான் சரியானது.
டாக்டர் சண்முகம்:
சென்னை அசோக்நகரில் செந்தூர் டயாபட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் என்ற பெயரில் கிளினிக் வைத்திருக்கிறார். நீரிழிவு மருத்துவத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.