இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்… மக்களே உஷார்! – Kumudam

Spread the love

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாகச் சுட்டெரித்து வந்த நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கோடை மழையும் மக்களை ஏமாற்றிய நிலையில், வடகிழக்குப் பருவமழை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோது இருந்த வேகம் நீடிக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்யாத நிலையில், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவானபோதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால், சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.மேலும், தெற்கு கேரளம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுவதால் மழை பெய்து வருகிறது.

இன்று நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவைப் பொறுத்தவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 90 மில்லிமீட்டர் மழை பதிவானது. நாரவாரிக்குப்பம், ஈஞ்சம்பாக்கம், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *