அம்மே நாராயணா… தேவி நாராயணா!
கேரளத்தில் பொதுவாகப் பலரும் “அம்மே நாராயணா’ என்று அம்பிகையை வழிபடுவது வழக்கம். ஆனால், சோட்டானிக்கரை ஆலயத்தில் தனித்துவமாக,
‘அம்மே நாராயணா தேவி நாராயணா
லட்சுமி நாராயணா பத்ரே நாராயணா’
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபடுகிறார்கள்.
இதற்குக் காரணமாக ஒரு விசேஷமான காரணம் கூறப்படுகிறது. இங்கு அம்பிகையின் சாந்நித்தியத்துடன் லட்சுமி நாராயணரின் சாந்நித்தியமும் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிகாலை வேளையில் சரஸ்வதி அம்சமாகவும், நண்பகலில் லட்சுமி அம்சத்துடன் நாராயணரின் சாந்நித்தியத்துடனும், மாலை வேளையில் துர்கை அம்சமாகவும் அம்பிகை அருள்பாலிப்பதாகச் சொல்லப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகையில் மூலவர் திருமேனியில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியரின் அம்சங்களும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சங்களும் இணைந்திருப்பதைப் போலவே, சோட்டானிக்கரையிலும் அம்பிகையுடன் லட்சுமி நாராயணரின் சாந்நித்தியம் இணைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அம்பிகைக்குத் துணையாக வந்த சாஸ்தா!
சோட்டானிக்கரை ஆலயத்தில் இரண்டு சாஸ்தா சந்நிதிகள் இருப்பதற்கும் ஒரு சுவாரசியமான வரலாறு சொல்லப்படுகிறது. அம்பிகை ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, தன்னை நம்பியிருக்கும் பக்தர்களின் நலனை விசாரித்துவிட்டு வருவதாக ஐதிகம்.
ஒருமுறை அம்பிகை இரவு நேரத்தில் சர்வ அலங்கார பூஷிதையாக, நகைகள் அணிந்து பவனி வந்துகொண்டிருந்தாள். அப்போது ஆதிசங்கரரின் தாயார் ஆரியாம்பாள் வாழ்ந்த மேப்பாளூர் மனை வழியாகச் சென்றாள்.
அந்த வழியில் வீட்டின் திண்ணையில் படுத்திருந்த இருவர், நள்ளிரவில் நகைகள் அணிந்துகொண்டு தனியாகச் செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அவள் யார் என்று தெரியாமல், ‘இந்த இரவு நேரத்தில் துணைக்கு யாரும் இல்லாமல் தனியாகச் செல்கிறாளே… இவளுக்குப் பிள்ளை குட்டிகள் இல்லையோ’ என்று பேசிக்கொண்டார்கள்.