"இன்று கொண்டாடுறாங்க; ஆனா ஒரு வருடத்திற்கு முன்பு…" – ரிஷிகாந்த் குறித்து 'மொத ராத்திரி' இயக்குநர்

Spread the love

‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘டோரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரிஷிகாந்திற்கு ‘மொத ராத்திரி’ படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'மொத ராத்திரி'
‘மொத ராத்திரி’

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று கூட தெரியவில்லை!

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன்பு, நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஒரு படத்திற்காக எங்களுக்கு ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் தேவைப்பட்டார். ஆனால் எங்களால் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. பயணச் செலவு கூட கொடுக்க முடியவில்லை.

அப்போது ரிஷிகாந்த் தனது ஸ்கூட்டியிலேயே வந்து, தன் சொந்த ஆடையையும் எடுத்துக்கொண்டு வந்து அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அங்குதான் எங்கள் பந்தம் தொடங்கியது. கடந்த 8 வருடங்களில், நாங்கள் இருவருமே பல போராட்டங்கள், தனிப்பட்ட இழப்புகள், தோல்விகள் என எல்லா சூழ்நிலைகளையும் ஒன்றாகவே கடந்து வந்திருக்கிறோம்.

நாங்கள் நிறைய சண்டை போட்டிருக்கிறோம்; நிறைய விவாதித்திருக்கிறோம். படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்களுக்குள் ஒரு சண்டை வந்தது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நடுவில், ஒரே ஒரு விஷயம் மட்டும் என்றுமே மாறவில்லை.

அவர் என்னை ஒரு இயக்குநராக நம்பினார். நான் அவரை ஒரு ஹீரோவாக நம்பினேன்.

அந்த நம்பிக்கைதான் எங்கள் இருவரையும் ‘மொத ராத்திரி’ வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ரிஷிகாந்த்
ரிஷிகாந்த்

இன்று திரையுலகம் எங்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, சென்னை தேனீர் கடையில் உட்கார்ந்து கொண்டு எங்களது நிலையை நினைத்து புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டும்தான் நாங்கள் இருவரும் இருந்தோம்.

பிறகு, ஒரு வியாழக்கிழமை எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது. நீங்கள் (ரிஷிகாந்த்) போட்ட உழைப்பிற்கு இந்தப் பாராட்டுகள் எல்லாம் போதாது. இன்னும் எவ்வளவு பாராட்டுக்கள் கிடைத்தாலும், நீங்கள் சந்தித்த அவமானங்களுக்கும் மரியாதையின்மைக்கும் அது ஈடாகாது.

நீங்கள் கடந்து வந்த பாதையை நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் எவ்வளவு போராடினீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்; இந்தத் தருணத்திற்கு நீங்கள் எந்த அளவிற்குத் தகுதியானவர் என்பதும் எனக்குத் தெரியும்.

இந்த மனிதர் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வரப்போகிறார். ஏற்கனவே பலரும் அறியும் ஒரு பெயராக மாறிவிட்டார், ஆனால் ஒருநாள் தமிழ் சினிமாவுக்கான அடையாளங்களில் ஒருவராகவே இவர் இருப்பார். என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ரிஷிகாந்த்
ரிஷிகாந்த்

நாங்கள் எங்கள் படத்தின் விளம்பரங்களை ரிஷி அண்ணனுக்காக “யார் நீ?” என்ற கேள்வியோடு ஒரு வீடியோவில்தான் தொடங்கினோம். இப்போது… மீதியெல்லாம் வரலாறு! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்டார் ரிஷிகாந்த்!” என்று எமோஷனலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *