“‘தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது” என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரே நாளில் த.வெ.க ஆட்சியை காட்டமாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியையும் விமர்சித்து அறிக்கை வெளியிடக் காரணம் காரணம் என்ன?
தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று ஒருவார காலம்தான் ஆகிறது. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக நேற்று மாலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், “சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.