சிவபெருமான் வாசுகி பாம்பின்மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். அப்படிப்பட்ட அபூர்வ திருக்கோலத்தை இங்கே மட்டுமே தரிசிக்க முடியும். ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி சகலரையும் அஞ்சச் செய்த வாசுகி தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார்.
ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார்.

வாசுகி நர்த்தனர் திருக்கோலம் மிகவும் அழகானது. இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்களாக மற்ற திருக்கரங்களில் மான், மழு, யோக முத்திரைகளோடு அருள கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஈசன். இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும், போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம். வாட்டத்தை நீக்கும் இந்த வாசுகி நர்த்தனரை வணங்கி சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்கிறார்கள்.
வருணனின் வெம்மை நோய் தீர்த்த தலம் என்பதால், இன்றும் சீதளம், வெம்மை சம்பந்தமான நோய் கண்டவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கிப் பலன் பெற்று செல்கிறார்கள்.
கடுமையான தலைவலி, தலைப்பாரம் கொண்டவர்கள் இங்கு வந்து வழிபட நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். நோய் தீர்க்கும் அற்புதத் தலமாக மேகநாதேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. அதேபோல மேகநாதன் இங்கு ஆயுள் பலம் வேண்டி வழிபட்டதால் இது ஆயுள் வரம் அருளும் தலமாகவும் உள்ளது.