"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" – பாடகி ஸ்வாகதா

Spread the love

பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது ரிஷிகேஷில் வசித்து வருகிறார். ‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் ஸ்வாகதா, தற்போது இசைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷில் தொழில்முனைவோராக இயங்கி வருகிறார்.

Swagatha Krishnan
Swagatha Krishnan

‘சிவசங்கரி டாக்ஸ்’ எனும் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், சென்னையில் அவர் பிரபல இசையமைப்பாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனைச் சிசிடிவி கேமராவால் படம்பிடித்து அவர் பிளாக்மெயில் செய்ததாகவும் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “இனிமேல் இசைத்துறையில் என்னால் இருக்க முடியாது என்கிற சூழல் வந்துவிட்டது. நான் கொடூரமான பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். நான் தப்பித்து வந்திருக்கிறேன்.

இப்போதுகூட அது பத்தி நினைக்கும் போது எனக்குக் கை நடுங்குகிறது. வேறு யாரும் இதில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக என் நண்பர்களிடம் இது குறித்து எச்சரித்தேன். ஒரு இசையமைப்பாளர்தான் என்னை துன்புறுத்தியவர். அதன் பிறகு சென்னையில் என்னால் இருக்க முடியவில்லை.

Swagatha Krishnan
Swagatha Krishnan

நான் என்றும் யாரையும் சார்ந்து வாழ்ந்தது கிடையாது. யாருடைய நிழலிலும் வாழ்ந்தது கிடையாது. அந்த இசையமைப்பாளரின் பெயரை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. அதுக்கான நேரம் வரும்போது, நிச்சயமாக அதைச் சொல்லுவேன்.

எந்தப் பொண்ணிற்கும் எனக்கு நடந்ததுபோலநடக்கக்கூடாது. நிறைய பெண்கள், இதே ஆணுடைய வலையில் விழுந்து தப்பிக்க முடியாமல் எனக்கு மெசேஜ் செய்தார்கள்.” என்றார்.

மேலும், “என்னுடைய 9 வருட காதல் முறிவுக்கு வந்த சமயத்தில் இந்த இசையமைப்பாளர், என் மீது ஆதிக்கம் செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த நேரத்தில், இந்த உறவு முறிவினால் பயங்கர மனச்சோர்வில் இருந்தேன். இப்படி என்னை நடத்தியவர், எனக்கான சம்பளத்தையும் நிறுத்திவிட்டார். அவருடைய செலவுகளுக்கு என்னிடமிருந்து அவர் கடன் வாங்கினார்.

அப்போது என்ன நடக்கிறது என எனக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நான் அன்பாக இருந்தேன். இப்படியானவர், திடீரென ஒரு நாள் ஸ்டுடியோவில் வைத்து என்னை துன்புறுத்தினார்.

Swagatha Krishnan
Swagatha Krishnan

அந்தச் சம்பவம் நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அவருடைய ஸ்டுடியோவிலிருந்த சிசிடிவி கேமராவை வைத்து என்னைப் படம் பிடித்து, அதனை வைத்துப் பிளாக் மெயிலும் செய்தார்.

அதுமட்டுமின்றி, பல இடங்களில் சீக்ரெட் கேமராவையும் வைத்திருந்தார். அவர் பிளாக் மெயில் செய்யும்போது, ‘நீங்கள்தான் ஜெயிலுக்குள் செல்வீர்கள்’ எனவும் நான் சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. என்னைத் திருடி என என் மீது பழியைச் சுமத்தினார்கள்.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *