பிராந்திய தலைவர்களின் அதிருப்தி:
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தியை விட சீனியர்கள். அவர்கள் ராகுலைத் தங்களுக்குச் சமமான தலைவராக ஏற்றுக் கொண்டாலும், தங்களுக்கு மேலிருக்கும் ஒரு ‘பாஸ்’ ஆக ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.
“எங்களைக் கலந்தாலோசிக்காமல் எப்படி முடிவெடுக்கலாம்?” என்ற ஈகோ பிரச்சினைகள் கூட்டணிக்குள் வெடிக்கக் கூடும்.

கடந்த கால தேர்தல் தோல்விகள் : 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ராகுல் காந்தியை நம்பிக் களம் இறங்கியபோது ஏற்பட்ட தோல்விகளை பாஜக மீண்டும் தோண்டித் துருவி பிரச்சாரமாக்கும்.
2024-ல் காங்கிரஸ் 99 இடங்களுடன் கம்பேக் கொடுத்திருந்தாலும், தனிப் பெரும்பான்மை பெறும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை.
‘இந்தியா’ கூட்டணியின் எதிர்வினை எப்படி இருக்கும்?
காங்கிரஸ் கட்சி தயங்கிய போதும் கூட ராகுல் காந்தியை பிரதமர் முகமாக முதல் முதலாக அறிவித்தது திமுக தான். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியை வருக நல்லாட்சி தருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால் அதே திமுகவுடன் தற்போது காங்கிரஸ் கட்சி மிக கசப்பான முறையில் உறவை துண்டித்து இருக்கிறது.
இதை இந்தியா கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் யாரும் ரசிக்கவில்லை. கடந்த ஜூன் 8-ம் தேதி டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட தங்களது அதிருப்தியை அவர்கள் காங்கிரஸ் மீது வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் மேற்கு வங்கம், அஸ்ஸாம் என பல மாநில தேர்தல்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தோல்வியை தான் தழுவி இருக்கிறது.
எனவே அவர்கள் அனைவருமே வலுவிழந்து போயிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும் அவர்கள் முழு மனதுடன் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இதனை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதேபோல், டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸுடன் நேரடிப் போட்டியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் ராகுலை முன்னிறுத்துவதை விரும்பாது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்களும் இதற்கு உடன்படுவது கடினம்.
இதனால், தேர்தலுக்கு முன்பே கூட்டணிக்குள் விரிசல் விழ வாய்ப்புள்ளது. பாஜகவை ஒன்றாக எதிர்ப்பதை விடுத்து, ‘யார் பிரதமர்?’ என்ற சண்டை கூட்டணிக்குள் வந்து, அது வாக்கு வங்கியைப் பிரிக்கக்கூடும்.
சுருங்கக்கூறின், 2029 தேர்தலுக்கு இப்போதே ராகுல் காந்தியை முன்னிறுத்துவது என்பது காங்கிரஸைப் பொறுத்தவரை இருபக்கமும் கூர் உள்ள கத்தி போன்றது. சரியாகக் கையாண்டால் இலக்கைத் தாக்கலாம்.
தவறினால் சொந்தக் கைக்கே ஆபத்தாக முடியும். காங்கிரஸின் உட்கட்சி பலத்திற்கும், ராகுலின் தலைமைத்துவத்திற்கும் இது முக்கியம் என்றாலும், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையைக் குலைக்காமல் இதனை அவர்கள் எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதில்தான் 2029 தேர்தலின் மாஸ்டர் கேம் அடங்கியுள்ளது.!