US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை! | shattered-retirement-america-student-education-loans

Spread the love

அமெரிக்கா… உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது என்றால், நம்ப முடிகிறதா? ஆம், சுமார் 30 லட்சம் வயோதிக அமெரிக்கர்களின் அமைதியான ஓய்வுக்காலத்தை, அவர்கள் பல தசாப்தங்களுக்கு முன் வாங்கிய கல்விக் கடன் எனும் பூதம் இன்று சிதைத்துக்கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் பெற்ற கடன்கள், இன்று அவர்களின் நிகழ்காலத்தையே விழுங்கும் அவலநிலை அரங்கேறி வருகிறது.

கல்வித் தரவு முன்முயற்சி (Education Data Initiative) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு, இந்த நெருக்கடியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதன்படி, 62 முதல் 80 வயதுக்குட்பட்ட “பேபி பூமர்’ தலைமுறையைச் (1946 -1964 காலக்கட்டத்தில் பிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்) சேர்ந்த ஒருவர், சராசரியாக $42,780 (சுமார் 35 லட்சம் ரூபாய்) கூட்டாட்சி கல்விக் கடனை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறார். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை மறைந்துள்ளது. அதற்கு உதாரணமாக நிற்கிறார், மைன் மாகாணத்தைச் சேர்ந்த 71 வயதான ராபர்ட் லீ.

கல்விக்கடன்

கல்விக்கடன்

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு, தன் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்காக $66,000 கடன் வாங்கியிருக்கிறார் ராபர்ட் லீ. இத்தனை ஆண்டுகள் கழித்தும், அவரால் அந்தக் கடனை முழுதாக அடைக்க முடியவில்லை. இன்றும் அவர் மீது $51,000 கடன் பாக்கி இருக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் அவர் பேசிய வார்த்தைகள், இந்த நெருக்கடியின் உச்சகட்ட வேதனையை உணர்த்துகின்றன. “‘இட்ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப்’ திரைப்படத்தின் ஜிம்மி ஸ்டீவர்ட் போல நான் உணர்கிறேன். நான் உயிரோடு இருப்பதை விட, செத்தால்தான் எனக்கு அதிக மதிப்பு” என்று அவர் கண்ணீருடன் குறிப்பிடுகிறார். அவரின் இந்த வார்த்தைகள், ஒரு தனிநபரின் விரக்தியாக மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கையறுநிலையாகவே ஒலிக்கிறது.

ஓய்வுக்காலத்தை நெருங்கும் வயதில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் பாக்கி இருப்பது சாதாரண விஷயமல்ல. 2026-ம் ஆண்டில், சராசரி மாதாந்திர சோஷியல் செக்யூரிட்டி ஓய்வூதியத் தொகை $2,071 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சராசரி கல்விக் கடன் மாதத் தவணை $390. அதாவது, ஒருவரின் ஓய்வூதியத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை கல்விக் கடன் விழுங்கிவிடுகிறது. தொழிலாளர் புள்ளியியல் கணக்குப்படி, இது போக சராசரி ஓய்வூதியதாரரிடம் மாத இறுதியில் மிஞ்சுவது வெறும் $336 மட்டுமே. இந்த சொற்ப தொகையை வைத்துக்கொண்டு அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத துயர நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *