இயந்திரமயமாக்கல்; கமிஷன்; செலவு: சட்டமன்றத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான காரசார விவாதங்கள் | அணை ஓசை 24

Spread the love

மேட்டூர் அணை திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட உள்ள ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க, மனித உழைப்புக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அரசிடம் ஏதேனும் முன்மொழிவு உள்ளதா என்று உறுப்பினர் சி.வி.வெங்கடரமண அய்யங்கார் சபையில் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறு இருப்பின், இந்த ஆட்சிப் பகுதியில் பெரும் துன்பமும், வேலையின்மையும் நிலவும் இந்த நேரத்தில், இயந்திரமயமாக்கல் பாதிப்பை அதிகப்படுத்தும் காரணியாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கேள்வி எழுப்பினார்.

சி.பி.ஆர் பதிலுரைக்கும் போது, “இயந்திரங்களை பயன்படுத்தினாலும், மனித உழைப்புக்கு போதுமான வாய்ப்பு இருக்கும்” என்றார்.

மேட்டூர் அணை இறுதியாக அமையும் இடம் குறித்த தகவல்கள் மற்றும் செலவளிக்கப்பட்ட தொகை குறித்தும் அவையில் கேள்வி எழுப்பப்பட்டது. 1925-26-ல் ரூ 8,43,639 மற்றும் 1926-27-ல் 54 லட்சம் ரூபாயும் செலவளிக்கப் பட்டது எனவும் இதில் 12 லட்சம் இந்தியாவில், 42,000 பவுண்டுகள் இங்கிலாந்திலும் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. அப்போது நடந்த விவாதம் மிகுந்த சுவையானது. அப்படியே கீழே:

கேள்வி – பதில் விவரம்:

இங்கிலாந்தில் “42,000 பவுண்டுகள் மதிப்புக்கு ஆர்டர் தந்ததாக அறிகிறோம். இது எப்போது அளிக்கப்பட்டது என்பதே கேள்வி?”

சி.பி.ஆர்: “1925 – 26 ம் ஆண்டில் ஆர்டர் அளிக்கப்பட்டது”.

சி.வி.வி: “எந்த பொருட்களுக்கு யாரால் ஆர்டர் அளிக்கப்பட்டது”.

“ஒரு மண் தோண்டும் இயந்திரம் கால்வாய் பணிகளுக்காக. மற்றவை சரி பார்த்து சொல்ல வேண்டும்.”

“இவை முறையாக டெண்டர் விடப்பட்டு ஆர்டர் தரப்பட்டதா?”

“ஹை கமிஷனருக்கு வேண்டுகோளை அனுப்பி அவர்கள் டெண்டர் கோரி விளம்பரம் செய்தார்கள்”.

அரசுக்கு அதிகாரம் இல்லையா

“மேற்கண்ட 42,000 பவுண்டுகளுக்கு உண்டான அனைத்து ஆர்டர்களும் ‘ஹை கமிஷனர்’ மூலமாகத்தான் அனுப்பப்பட்டதா?”

“ஒரு சில ஆர்டர்கள் டெல்லியில் உள்ள இந்தியன் ஸ்டோர்ஸ் பிரிவிலிருந்து டெண்டர் கோரப்பட்டு பல நிறுவனங்களிடம் இருந்து அவை பெறப்பட்டு ஆர்டர் அளிக்கப்பட்டன. மற்றவை ஹை கமிஷனர் சர். அதுல் சாட்டர்ஜி மூலம் ஆர்டர்கள் அளிக்கப்பட்டன.”

“ஹை கமிஷனர் அல்லது டெல்லியில் உள்ள முகவரை குறிப்பிடாமல், டெண்டர்களை கோர இந்த நாட்டில் உள்ள அரசுக்கு அதிகாரம் இல்லையா?”

“அரசுக்கு அதிகாரம் உண்டு! ஆனால், ‘இந்திய ஸ்டோர்ஸ் பிரிவு’ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவும், தேவையான மாற்றங்களை சுட்டிக்காட்டவும் நிபுணர்களையும் கொண்டுள்ளது. நிபுணர்கள் குழுவை இங்கிலாந்தில் உள்ள “உயர் ஆணையர்” (HIGH COMMISSIONER) பணியமர்த்துகிறார். இந்தக் காரணங்களினாலும், அரசியலமைப்பு நோக்கத்தின்படியும் முடிந்தவரை இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்குவது அல்லது ‘ஹை கமிஷனர்’ மூலமாக பெறுவது விரும்பத்தக்கதாக அரசு நினைக்கிறது.

“இந்திய கண்காணிப்பு பொறியாளர் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டாரா? ஏன்?

சி.பி.ஆர்., நேருவுடன்

“ஆம், உண்மை! ஆனால், காலப்போக்கில் மேட்டூர் திட்டத்தில் இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடும்”.

“இந்திய கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் தலைமைப் பொறியாளரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி உண்மையா? இது ரகசியம் என்றில்லாமல் இருந்தால் அது குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்”.

“அது சரியான அறிக்கை அல்ல! இது குறித்து மேற்கொண்டு நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை. கேள்விக்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டால் இது குறித்து விவரமான பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்”.

L. K. துளசிராம்: “42,000 பவுண்டுகள் மதிப்புள்ள தொகைக்கு பெறப்படும் இயந்திரங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் யார்? “சட்ட உறுப்பினர்” (Law Member) விளக்க வேண்டும்”?

C. P. R: “நிறைய தயாரிப்பாளர்கள் உண்டு. அந்தப் பட்டியல் உறுப்பினர்களுக்கு தேவையானால், அந்த முழு விவரங்களை சமர்ப்பிக்கிறேன்”.

S. முத்தையா முதலியார்: “மண் தோண்டும் கருவி எங்கு பயன்படுத்தப்பட போகிறது”?

C. P. R : கால்வாய் பிரிவில், தஞ்சாவூரில்!

S. M. M: “எப்போதிலிருந்து மண் தோண்டும் கருவி பயன்பாட்டுக்கு வரப்போகிறது?”

C. P. R: “கருவி வந்து சேர்ந்தவுடன் வேலை ஆரம்பிக்கப்பட்டு விடும்.”

S. M. M: “பட்டுக்கோட்டை தாலுகாவில் எப்போது பாசனத் தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்”?

C. P. R: “அது இந்த சட்டமன்றத்தின் கைகளில் உள்ளது”!

S. M. M: ” வரும் ஏழு ஆண்டுகளில் கால்வாய்களில் எப்போது தண்ணீர் பாயும் என்பதை கூற இயலாதா”?

C. P. R: “சில இடங்களில் அகழ்வு செய்யும் கருவி பயன்படுத்தப்படும். பம்பாய் மற்றும் பஞ்சாப் திட்டங்களில் இது போன்ற கருவி பயன்படுத்தப்பட்டு அவை கட்டுமானப் பணியை வெகுவாக விரைவுபடுத்தி உள்ளன.

இங்கே நாம் இன்னும் முடிவு செய்யவில்லை. கருவியை மட்டுமே பயன்படுத்துவதா? அல்லது கூடுதலாக மனித உழைப்பையும் (Manual Labour) பயன்படுத்துவதா? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த கருவிகள் எப்படி வேலை செய்கிறது என்பதை காண ஒரு முயற்சி எடுத்து பார்க்க வேண்டி உள்ளது. இதற்கு பிறகு தான் எந்த முறையில் இந்த வேலைகள் செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

S. M. M: பம்பாய் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் உள்ள நில அமைப்புகள் மற்றும் மண்ணின் தன்மைகளுக்கும் தஞ்சாவூர் பகுதிகளுக்கும் ஒத்த குணங்கள் உள்ளனவா?

C. P. R: பஞ்சாபில் ஒத்த தன்மை இல்லை. ஆனால் பம்பாய் மற்றும் தஞ்சாவூர் நிலங்களின் தன்மைகள் ஒத்துப் போகின்றன.

R.B.C.S.R.M: அனைத்து நாளிதழ்களில் விளம்பரம் செய்து, செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு டெண்டர் கூறி அறிவிப்பு வெளியிடுவாரா “சட்ட உறுப்பினர்”.

C. P. R: அந்தக் கேள்வி மனதிற்குள் வைக்கப்படும். ‘ஹை கமிஷனர்’ மூலம் பொருட்கள் வாங்கும் போது அவருக்கு விருப்பமான இடத்தில் விளம்பரம் செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கப்படும்.

C. V. V: “சட்ட உறுப்பினரால், கோயம்புத்தூர் நீர் வழங்கும் திட்டத்தில் நடந்தது போன்ற குளறுபடிகள் இங்கு நடக்காது என்ற உத்தரவாதம் அளிக்க முடியுமா? ஏனெனில், அங்கு டெண்டர் கோரப்படாமல் வேலை நடந்தது”.

C. P. R: “டெண்டர் கோராமல் பொருட்களை வாங்குவது குறித்து நாங்கள் சிந்திக்கவே இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன். மெட்ராஸ் அரசு பொதுவாக தேவையான ஆர்டர்களை டெல்லியில் உள்ள இந்தியன் ஸ்டோர்ஸ் பிரிவு அல்லது லண்டன் ‘ஹை கமிஷனர்’ அலுவலகத்திற்கு ஆர்டர் செய்வது நடைமுறை. லண்டனில் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் விளம்பரம் செய்வது குறித்து அவர்கள் சொந்த விளம்பர முறைகளை பழக்கமாக வைத்துள்ளார்கள்”.

“ஒரு சமீபத்திய நிகழ்வில் இந்திய ஸ்டோர்ஸ் பிரிவு பின்பற்றும் நடைமுறையில் வட இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மெட்ராஸ் நிறுவனங்களுக்கு இது பாதகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்திய ஸ்டோர்ஸ் பிரிவு தொடர்ந்து இனிமேல் வட இந்தியாவில் மட்டுமின்றி தெற்கிலும் பரவலாக விளம்பரங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளனர்.

C. V. V: “இந்திய ஸ்டோர்ஸ் பிரிவு ஐந்து ஆண்டு காலத்திற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு ரயில்வே வேகன்களுக்கு ஆர்டர் அளித்திருப்பதால் தேவையற்ற இயந்திரங்களுக்கு இங்கு அரசு இறக்குமதி அனுமதி அளிக்கப்படாமல் உறுதி செய்யுமா”?

C. P. R: அது குறித்து ஆவண செய்யப்படும்.

S.அற்புதசாமி உடையார்: “அகழ்வுப் பணிகளில் மனித உடல் உழைப்பு அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவது – இதில் எது விலை மலிவானது? இரண்டுக்கும் இடையே செலவுகளை ஒப்பிட்டு பார்த்தீர்களா”?

சி.பி.ஆர்., காந்தியுடன்

C. P. R: “அகழ்வுப் பணி கருவிகள் மூலம் நடைமுறைப்படுத்துவது செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”.

S. M. M: “லா மெம்பருக்கு” கொடுக்கப்பட்ட அறிவுரையை தவிர அவர் அந்த கேள்வியை ஆய்வு செய்து, அதற்கு உண்டான பதிலுடன் தன்னை திருப்தி படுத்திக் கொண்டாரா”?

C. P. R: “அந்தத் துறை அளித்துள்ள புள்ளி விவரங்களை புரட்டிப் பார்த்தேன் என்று கூறுவேன். ஆனால், மாண்புமிகு உறுப்பினர்கள் விரும்பினால் மீண்டும் அந்த விஷயங்களுக்குள் சென்று ஆழமாக பார்ப்பேன்”.

S. M. M: “இரண்டுக்கும் இடையில் உண்டான ஒப்பீட்டுச் செலவுகள் அடங்கிய அறிக்கையை வெளியிட முடியுமா”?

C. P. R: “அது குறித்து பரிசீலிக்கப்படும், ஐயா”!

அப்துல் ஹமீது கான்: “12 லட்சத்துக்கு இந்திய கணக்கில் வாங்கும் பொருட்கள் இந்தியாவில் கிடைக்கின்றனவா? அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா”?

C. P. R: “இது குறித்து நோட்டீஸ் பெற விரும்புகிறேன். ஆனால், அவை முக்கியமாக இந்தியாவில் கிடைக்கும் வேகன்கள் மற்றும் டிரக்குகள்”.

அ.ஹமீது கான்: “இங்கிலாந்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 42 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்களை பற்றி இந்தியாவிலேயே அவற்றை பெற முடியவில்லை என்று அரசாங்கம் தங்களை தாங்களே திருப்திப்படுத்திக் கொண்டதா?”.

C. P. R: “அது அப்படித்தான். இந்திய அங்காடித் துறையின் விதிகள் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரியும். அவை இந்தியாவில் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு வெளியே எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது என்பதுதான்”.

L.K. துளசிராம்: “கருவிகளைக் கொண்டு அகழ்வுப் பணிகள் செய்வதை விட மனித உழைப்பின் மூலம் பணிகளைச் செய்வது மலிவானவை என்பதை தகுந்த தரவுகள் மூலம் இந்த அவையில் அவருக்கு முன்னதாக வைத்தால், சட்ட உறுப்பினர் கருவிகளுக்கு உண்டான ஆர்டர்களை ரத்து செய்வாரா”?

C. P. R: இப்படி ஒரு உறுதிமொழியை என்னால் கொடுக்க முடியாவிட்டாலும், பரிசீலனை செய்யப்படும்!

ராமநாதபுரம் ராஜா: மனிதக் கைகளால் செய்யப்படும் உழைப்புக்கு இயந்திரம் மூலம் செய்யப்படும் வேலைக்கும் உண்டான விலை வித்தியாசம் அவ்வளவு பெரிதாக இல்லை என்றால் மெட்ராஸ் மாகாணத்தில் நிலவும் பஞ்சம் வறட்சி இவற்றை மனதில் கொண்டு சட்ட உறுப்பினர் மக்களுக்கு வேலை தரும் வாய்ப்பு நல்லது. மனித உழைப்புக்கு முன்னுரிமை அளிப்பாரா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

“இது விஷயம் குறித்து பரிசீலிக்கப்படும்” என்ற C.P.R-ன் பதிலுடன் அன்றைய கேள்வி நேரம் முடிந்தது. மக்களின் மீது அனுதாபமும், வேலை வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பும் உறுப்பினர்களிடையே இருந்தது தெளிவாகிறது. பிரிட்டிஷ் அரசு இயங்கிய முறையும் இந்த விவாதம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பு: C.P.R= சி.பி. ராமசாமி அய்யர், S.M.M=எஸ். முத்தையா முதலியார், C.V.V= சி.வி. வெங்கடரமண அய்யங்கார், R.B.C.S.R.M=ராவ்பகதூர் சி. எஸ்.ரத்னசபாபதி முதலியார்.

மேட்டூர் அணை திட்டத்திற்கான இயந்திரங்கள் கொள்முதல் குறித்து மொத்தம் 10 கேள்விகள் எழுப்பப்பட்டன. பதில்களில் முக்கிய விஷயங்களாக கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்

முக்கிய அணைச்சுவர் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை 63.82 லட்சம் ரூபாய். சிறப்பு கருவிகள் மற்றும் ஆலைகளுக்கு என ஒதுக்கப்பட்டது இதில் 5 லட்சம் ரூபாய். வேகன்கள் துளையிடும் ட்ரில் கருவிகள், மற்றும் சிறிய கிரஷர்கள் போன்றவற்றுக்கு ஏற்கனவே செலவழிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இயந்திரங்களில் குவாரி ஆலைகள், கிரஷர் எனப்படும் கல்லுடைக்கும் இயந்திரங்கள், மின் நிலையம் மற்றும் இதர சிறு துணை ஆலைகளும் அடங்கும். தலைமைப் பொறியாளர் மண் அகழ்வு பணிக்கான மூன்று ‘எக்ஸ்கவேட்டர்ஸ்’ கொள்முதல் செய்துள்ளார்.

இது கால்வாய் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மண் அகழ்வு செய்யும் இயந்திரங்கள். இவற்றை கொள்முதல் செய்யப்பட்டதற்கு உறுப்பினர்கள் பலர், துணை கேள்விகள் பலவற்றை வைத்தனர்.

பிரிட்டிஷ் பொறியாளர்கள் பயன்படுத்திய கார் & ஓட்டுநருடன்

தலைமைப் பொறியாளர் மண் அகழ்வுப் பணிக்காக 3 எக்ஸ்கவேட்டர்களை வாங்கினார். இவை கால்வாய் பணிகளுக்கான மண் அகழ்வு இயந்திரங்கள். இது குறித்து சட்டமன்றத்தில், “ஏராளமான மனித உழைப்பாளர்கள் உள்ள நிலையில் ஏன் இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன? என்ற கேள்வி எழுப்பப் பட்டது.

அரசின் பதில்: நீண்டகாலத்தில் மலிவு, மற்றும் வேகமாகவும், திறம்படவும் வேலை முடியும். பணிகள் விரைவில் நிறைவடைவதற்கு அவசியம் என்ற பதில் அளிக்கப் பட்டது.

“இந்த இயந்திரங்கள் இங்கிலாந்திலிருந்து மட்டும் வாங்கப்படுகிறதா? என்பது குறித்து இன்னும் அரசு முடிவு செய்யவில்லை எனவும், சிறப்பு அதிகாரியின் முழு அறிக்கை விரைவில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், தலைமைப் பொறியாளருக்கு ரூ.50,000 வரை உள்ளூர் கொள்முதல் செய்ய அதிகாரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நேரிடை விவாதம் மிகுந்த சுவாரசியமானதாக உள்ளது.

ராமச்சந்திர ரெட்டி: “இந்த இயந்திரங்களை வாங்குவதில் அரசுக்கு ஏதேனும் கமிஷன் கிடைக்குமா”?

C. P. R: “இதை நான் நம்பவில்லை. அரசு இயந்திரங்களை வாங்க முடிவு செய்வதற்கு முன்பு எங்களுக்கு கமிஷன் கிடைக்குமா? அப்படி ஏதாவது நடைமுறை உள்ளதா என்று சொல்ல முடியாது. எனக்குத் தெரியவில்லை!

எத்திராஜுலு நாயுடு: “அரசு வாங்கும் பொருட்களுக்கு “ரிட்டன் கமிஷன்” வழங்கும் நடைமுறை இல்லையா”?

C. P. R: “அத்தகைய நடைமுறை இருந்தால் உயர் ஆணையர் அதை அறிந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அது நடைமுறையில் இருந்தால் மெட்ராஸ் அரசு அதை இழக்காது.

எத்திராஜுலு: பெரிய கால்வாய் வெட்டும் பணிகளுக்காக தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதா? எப்போது கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்படும்?

C. P. R: நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து முடிந்தவுடன் முழுவதுமாக பணிகள் ஆரம்பமாகும். இருப்பினும் சில இடங்களில் பணிகள் ஆரம்பமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

கரந்த்: முழு திட்டத்துக்கும் மொத்தமாக 50,000 ரூபாய் வரை தலைமை பொறியாளர் தன் இஷ்டப்படி தேவையான இயந்திரங்களை வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறாரா அல்லது ஒவ்வொரு முறையும் அந்தத் தொகைக்கு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

C. P. R: 50,000 ரூபாய் வரை வாங்க அனுமதிக்கப்படுகிறார்.

ரத்தின சபாபதி முதலியார்: மேற்கண்ட 3 அகழ்வு பணி இயந்திரங்களும் ஒரே நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டுமா அல்லது வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற இயலுமா?

C. P. R: அவை ஒரு குறிப்பிட்ட வடிவில் இல்லை. இந்த இயந்திரங்கள் நன்கு அறியப்பட்டவை! அவை சுக்கூர், பம்பாய் மற்றும் நவீன கால்வாய் கட்டுமானத்தில் பயன்படுத்தப் படுபவையே ஆகும்.

G. ஹரி சர்வோத்தம ராவ்: இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூபாய் 50,000 வரை செலவழிக்கும் தலைமைப் பொறியாளரின் அதிகாரம் சட்டபூர்வமாக உள்ளதா?

C. P. R: அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் உள்ளது.

G. ஹரி: அப்படியெனில், அரசாங்கத்தால் மாற்ற முடியும் அல்லவா?

C. P. R: ஆம்! இந்திய அரசாங்கத்தால் முடியும்.

G. ஹரி: தலைமைப் பொறியாளர் செலவழிக்கும் ரூபாய் 50,000 மீது சென்னை அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா?

C. P. R: மெட்ராஸ் அரசு அதன் தலைமை பொறியாளர் மீது அதன் சொந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளது.

G. ஹரி: தலைமை பொறியாளர் ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே வாங்க முடியாது என்பதை உத்தரவாதப்படுத்துமா?

C. P. R: அரசாங்க கவனம் இல்லாமல் அவர் வாங்குவது என்பது கேள்வியே அல்ல! அரசு அவருக்கு அகழ்வு இயந்திரங்களை வாங்குவதற்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்துள்ளது.

J. A. சல்தானா: தவறான கொள்முதல் செய்யப்படாமல் இருக்க என்ன சோதனைகளை அறிமுகப்படுத்தி உள்ளது? அத்தகைய கொள்முதல் பற்றி எங்களுக்கு தெரியும்!

C. P. R: “கொள்முதல் பொதுவாக உயர் ஆணையர் அல்லது இந்திய ஸ்டோர்ஸ் துறையின் ஆலோசனையின் பேரில் செய்யப்படுகின்றன. அவர்களின் கீழ் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் கொள்முதல் செய்ய வேண்டிய இயந்திரங்களின் தரம் மற்றும் தன்மை குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.

இந்த அகழ்வு பணி இயந்திரங்கள் (Excavator ) தலைமை பொறியாளரால் உயர் ஆணையர் மூலம் அவரது நிபுணர்களின் ஆலோசனையின் உதவியுடன் வாங்கப்பட்டது”.

சல்தானா: “ஹை கமிஷனர்” அல்லது இந்திய ஸ்டோர்ஸ் பிரிவு மூலம் செய்யப்படும் கொள்முதல், நம் தேவைக்கு ஏற்றதா என்பதை அறிய மெட்ராஸ் அரசாங்கம் ஏதேனும் வழிமுறைகள் ஏற்படுத்தி இருக்கிறதா?

C. P. R: “மாண்புமிகு உறுப்பினர் இந்த கேள்வியை முன் வைத்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆணையரின் கடமைகளில் ஒன்று என இந்தத் திட்டத்தின் ஆணையர் அவர்களுக்கு கூறப்பட்ட கடமைப் பட்டியலில் கொள்முதல் முறைமை, பொருட்களை பாதுகாப்பது போன்ற விஷயங்களும் அடங்கும். இந்த பாதுகாப்பான முறைமை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது”.

R. S. முதலியார்: “ஒருவேளை ஒப்பந்ததாரர்கள் மனித உழைப்பை கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகழ்வு பணியை முடிக்க ஒப்புக்கொண்டு முன் வந்தால், இந்த இயந்திரங்களை வாங்கும் முடிவை மாண்புமிகு சட்ட உறுப்பினர் கைவிடுவாரா”?

C. P. R: இல்லை, அது முடியாது!

C. கோபால மேனன்: “இதே மாதிரியான இயந்திரங்கள் மற்ற இந்திய மாகாணங்களில் பயன்படுத்தப்படுகின்றனவா”?

C. P. R: “ஆம் ஐயா”!

G. ஹரி ராவ்: “எல்லா அகழ்வுப் பணிகளும் இந்த இயந்திரங்கள் மூலம் செய்யப்பட உள்ளதா என்பதை அறியலாமா”?

C. P. R: “பாசனக் கால்வாய்களில் இவைகள் மூலம் செய்யப்படும். சிறிய துணை வாய்க்கால்கள் மனித கைகளால் அவர்தம் உழைப்பின் மூலம் தோண்டப்படும்”.

பரிசல்

G. ஹரி ராவ்: “வேலையின் சில பகுதிகள் மனித உழைப்பின் மூலம் செய்யப்படும் என்றால் உடல் உழைப்பு மற்றும் இயந்திரங்களின் ஒப்பீட்டு விலையை கண்டறிய எந்த ஆரம்ப பரிசோதனையும் செய்யாமல் மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டது எப்படி”?

C. P. R: “பெரிய நீர்ப்பாசன பணிகளை மேற்கொண்ட பிற மாகாணங்களில் இருந்து பெறப்பட்ட இயந்திரங்கள் மற்றும் மனித உழைப்பு ஒப்பீட்டு செலவு குறித்த புள்ளி விவரங்கள் எங்களிடம் உள்ளன.

எப்படி இருப்பினும் ஏழு ஆண்டுகள் இந்த முக்கிய அணை பகுதி கட்டும் வேலை அதிகபட்சமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதற்குள் கால்வாய் பணிகள் முடிக்க வேண்டும் என்றால் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். ஏற்கனவே பதிலளித்தபடி மனித உழைப்பை தேவையான அளவு பயன்படுத்தி சிறிய வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும்”.

ஹரி ராவ்: “இந்த மூன்று இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தி அகழ்வு பணிகளை செய்து மனித உழைப்போடு ஒப்பிட்டுச் செலவை கண்டறியும் வரை அகழ்வு இயந்திரங்களை மேற்கொண்டு எதுவும் வாங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என்று கூற இயலுமா”?

C. P. R: “அந்த கேள்வி கவனிக்கப்படும்”.

கரந்த்: “இந்த இயந்திரங்கள் சரியாக எப்போது வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது”?

C. P. R: “அவை உயர் ஆணையர் மூலம் வாங்கப்பட்டது உடனடியாக அறிமுகப்படுத்தப்படுகிறது”.

கரந்த்: “சரியாக எப்போது பயன்படுத்தப்படும்”?

C. P. R: “எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அளித்தால் தெரியப்படுத்தப்படும்”.

C. V. V: “மொத்தம் 63 லட்சம் ரூபாய் மேட்டூர் திட்டம் முடியும் வரை இயந்திரங்கள் கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா”?

C. P. R: “அது முக்கிய அணை கட்டுமானத்திற்காக மட்டும். ஆம்”!

C. V. V: “தற்போதைய மதிப்பீட்டின்படி ஐம்பது லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்படும் இல்லையா”?

C. P. R: “ஆம் ஐயா”!

C. V. V: “திட்டத்தின் 10 ஆண்டுகள் வரை மொத்தமாக வாங்கப்படும் இயந்திரங்கள் குறித்த யோசனை, விவரங்கள் அரசுக்கு ஏதாவது இருக்கிறதா”?

C. P. R: “பத்து ஆண்டுகள் அல்ல, 7 ஆண்டுகளுக்குள் திட்டம் முடிக்க பெரும் என்பது எதிர்பார்ப்பு. இன்னும் சில குறைவான இயந்திரங்கள் தேவைப்படும் என்று அரசு கருதுகிறது”.

C. V. V: உயர் ஆணையரின் தலையீடு இல்லாமல் இயந்திரங்களை வாங்க இந்த அரசுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

C. P. R: ஆம் உள்ளது!

C. V. V: இந்த அரசால் வாங்கப்படும் இயந்திரங்கள் உயர் ஆணையர் மூலமாக வாங்குவதற்கு பதிலாக நேரடியாக பெறுவது மலிவாக இருக்கும் என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அவ்வாறு இந்த மெட்ராஸ் அரசு செய்யுமா?

C. P. R: அந்த விஷயம் பரிசீலிக்கப்படும்.

C. V. V: கான்கிரீட் போடும் இயந்திரங்கள் பயன்படுத்த படாவிட்டால் இந்த அணை கட்டுமானம் செய்ய சுமார் 580 நிபுணத்துவ கொத்தனார்கள் (Mason) பணி அமர்த்தப்படுவார்கள் என்று மதிப்பீடு காண்பிக்கிறது. இது எப்படி?

C. P. R: மாண்புமிகு உறுப்பினரின் தகவலுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

C. V. V: அந்தத் தகவல் சரியானதுதானா என்பதை நான் அறிந்து கொள்ள முடியுமா?

C. P. R: நீங்கள் நோட்டீஸ் அளித்தால் பதில் அளிக்கப்படும்.

C. V. V: இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதில் எத்தனை மேசன்களை மீதப்படுத்த முடியும்.

C. P. R: தயவுசெய்து நோட்டீஸ் தரவும். பிறகு பதிலளிக்கப்படும்.

இவ்வாறு கமிஷன் குறித்து ஆரம்பித்து தொடர்ந்து பல கேள்விகளால் அவை உறுப்பினர்கள் அரசை துளைத்தெடுத்தனர் எனலாம். ஆனால், அனைத்தையும் தனது வாதத்திறமையால் சமாளித்திருக்கிறார் சி.பி.ஆர்.

காவிரி நன்னீர் சிறப்பு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *