International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த மற்றொரு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நீடிக்கும் ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் பல வாரங்கள் நீடித்தது. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமெரிக்கா ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து சீராகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அமைதி எல்லாம் வெறும் சில நாட்கள் மட்டுமே இருந்தது. நிலைமை அங்கு வேறு விதமாகவே இருக்கிறது. மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே ஒரு போர் வெடிக்கும் ஆபத்தான சூழலே இருக்கிறது. அங்கு நிலைமை மீண்டும் மோசமடைய என்ன காரணம்.. பின்னணி என்ன என்பது தொடர்பாகப் பார்க்கலாம்!
பின்னணி
பனாமா நாட்டுக் கொடியுடன், சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய்யைச் சுமந்து சென்ற ‘எம்டி கிகு’ என்ற கப்பல் மீது சனிக்கிழமையன்று ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், நல்வாய்ப்பாக கத்தாரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தத் தாக்குதலில் கப்பல் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், ஈரானின் 10 ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள ஈரான் வான் பாதுகாப்பு தளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
மாறி மாறி தாக்குதல்
இதற்கு முன்பு வியாழக்கிழமையன்று ‘எவர் லவ்லி’ என்ற சிங்கப்பூர் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று ஈரான் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்க முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்கத் தொடங்கியது. இவ்வாறு இருதரப்பும் மாறி மாறித் தாக்கி வருவது தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
பொறுமை காட்ட முடியாது
தனது தற்காப்பு நடவடிக்கையை நியாயப்படுத்திய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது தாக்குதல்களை தொடர்ந்தால் அமெரிக்காவும் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கா பொறுமை காக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில் ஈரானின் புரட்சிகர காவல் படை, இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் பல இடங்களைத் தாங்கள் குறிவைத்தது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
இந்த மோதலின் தாக்கம் அண்டை நாடுகளிலும் எதிரொலிக்கிறது. பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் பகுதிகளில் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
உலகளாவிய கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது… இந்த பிராந்தியத்தில் இன்னும் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடந்து வரும் சமாதான பேச்சுவார்த்தைகளை இந்தத் தொடர் தாக்குதல்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன.

