இரவோடு இரவாக திடீர் தாக்குதல்.. ஈரானை மொத்தமாக முடக்க டிரம்ப் போடும் ஸ்கெட்ச்.. பதற்றம்! | US Strike Airport, Railway Station, Bridges In Iran For Sixth Straight Night, tension in middle east

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: வளைகுடாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹார்முஸிலும் மெல்ல இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்தது. இருப்பினும், இவை எல்லாம் வெறும் சில நாட்கள் மட்டுமே நீடித்தது.

US Iran

இரவோடு இரவாக தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி, மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இரவோடு இரவாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் மற்றும் டேட்டா சென்டரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க சென்டர் கமாண்டும் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மீது தாக்குதல்

தென்கிழக்கு ஈரானில் உள்ள இரான்ஷஹர் விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன. அமெரிக்க ஏவுகணை ஒன்று விமான நிலைய வளாகத்தைத் தாக்கியதாக கூறப்படுகிறது. முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ரயில்வே நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் ரயில்வே ஊழியர்கள் இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள இரண்டு முக்கிய பாலங்களும் தாக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பந்தர் அப்பாஸ், காமிர் மற்றும் லார் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

இந்த தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அதாவது ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்பவில்லை என்றால் அதன் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்குவோம் என்று எச்சரித்திருந்தார். அதில் அவர், “அடுத்த வாரம் ஈரானுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். மின்நிலையங்களும், பாலங்கள் தகர்க்கப்படம். பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரானை முடக்குவோம்” என்றார்.

நிலைமை மோசம்

அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளும் எச்சரிக்கை நிலைக்கு சென்றுள்ளன. குவைத் தனது வான்வெளியில் 32 ட்ரோன்கள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேபோல், ஈராக் நாட்டின் எர்பில் நகரம் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க நாட்டினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் தொடரும் நிலையில், அது மத்திய கிழக்கின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதே நிலை மீண்டும் தொடர்ந்தால் ஹார்முஸில் சரக்கு போக்குவரத்தும் கூட பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *