இறக்கத்தில் பங்குச் சந்தை… மொத்த முதலீடு (Lump sum) இப்போது செய்யலாமா, கூடாதா…?

Spread the love

அமெரிக்க – ஈரான் போர் நல்லதொரு முடிவுக்கு வந்து, ஹெர்மூஸ் நீரிணையம் மீண்டும் திறக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; அப்போது இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் உயரும்.

அமெரிக்க – ஈரான் போர் இன்னும் பல ஆண்டுகள் நீடித்தால் என்ன செய்வது, பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கிக்கொண்டே போனால், என்ன என்றெல்லாம் கேட்கலாம். அமெரிக்க – ஈரான் போர் இனிமேலும் நீடிக்க நீடிக்க, அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அது பாதகம் என்பதால், போர் தொடர்வதற்கு அமெரிக்கா விரும்பாது; இதே போல, பங்குச் சந்தையும் இன்னும் சில நூறு புள்ளிகள் இறங்கலாமே தவிர, 22000, 21000, 20000 என்று இறங்கிக்கொண்டே செல்லாது. அப்படி இறங்குவதை உலகின் எந்த நாட்டு முதலீட்டாளரும் விரும்ப மாட்டார்.

பங்குச் சந்தை ஏறக்குறைய 23000 புள்ளிகளுக்கு நெருக்கத்தில் வர்த்தகமாகி வருவது மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த பொன்னான ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

சந்தை இறங்கியிருக்கும் இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் ஏற்கெனவே செய்துவரும் முதலீட்டை எந்த வகையிலும் நிறுத்தக் கூடாது. எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தேவை இல்லாத பணம் கையில் இருந்தால், அதை மொத்த முதலீடாக முதலீடு செய்வதற்கு அருமையான வாய்ப்பாகும். இதனால் குறைந்த என்.ஏ.வி.யில் அதிகமான யூனிட்டுகள் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும்.

இந்த மொத்த முதலீட்டை ஒரே நேரத்தில் மேற்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. அதாவது, மொத்த முதலீட்டை முதலில் ஒரு டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஈக்விட்டி ஃபண்டுக்குக் கொண்டு சென்றால், சந்தை இறக்கத்தை நாம் இன்னும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட மாதிரி இருக்கும்!

ஆக, பங்குச் சந்தை கணிசமாக இறக்கம் கண்டுள்ள இன்றைய நிலையில் முதலீட்டாளர்கள் மொத்த முதலீட்டை மேற்கொள்ள நிச்சயம் பரிசீலிக்கலாம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *