Srilanka
oi-Vigneshkumar
கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கையில் இருந்தே இப்போது கோரிக்கை வந்துள்ளது. இலங்கை சிறைகளில் இப்போது பதற்றமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் அவர்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக நமது மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி, இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்கதையாக நடக்கிறது. இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் மீனவர்கள் தேவையே இல்லாமல் பல மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

தமிழக மீனவர்கள்
சிலர் விடுவிக்கப்பட்டாலும் செய்யப்பட்டாலும் கூட அவர்கள் படகுகளை இலங்கை நாட்டுடைமை ஆக்கிவிடுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இதுபோல கைது செய்யப்புடம் போது, ஒவ்வொரு முறையும் தமிழக அரசில் இருந்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்படுவதும் தொடர்கிறது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.
கோரிக்கை
இப்போதும் கூட பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் விசாரணை கைதிகளாகவும் தண்டனை கைதிகளாகவும் உள்ளனர். இதற்கிடையே இலங்கை சிறைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிறையில் மீனவர்கள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “38 தமிழக மீனவர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குவர். இலங்கையின் பல்வேறு சிறைகளில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.
விடுவிக்க நடவடிக்கை தேவை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். மேலும் இலங்கை சிறைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக மீனவர்களை மீட்டு, அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.


