India
oi-Vigneshkumar
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கப்படவுள்ளது. அதாவது இதுவரை இஸ்ரோ தயாரித்த ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் இன்று (ஜூலை 18) விண்ணில் பாய்கிறது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி துறையில் இந்தியா அசுர வளர்ச்சியை அடைந்தது. யாருமே கனவிலும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக குறைந்த செலவில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியா இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகி வருகிறது.

இஸ்ரோ
அதாவது இத்தனை காலம் விண்வெளி துறையில் இஸ்ரோ மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு அனுமதித்தது. அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் கவனம் செலுத்தின. குறுகிய காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆய்வுகளைத் தொடர்ந்தன.
இந்தச் சூழலில் தான் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி துறையில் இன்று மாபெரும் புரட்சி நடக்கவுள்ளது. அதாவது இதுவரை இஸ்ரோவின் ராக்கெட்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட நிலையில், இன்று முதல்முறையாக தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்படுகிறது. முழுமையாக இந்திய மண்ணில் இருந்து வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் முதல் ஆர்பிட்டல் ராக்கெட் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் புதிய கட்டத்தை எட்டுகிறது.
விக்ரம் 1
ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக மேற்கொண்ட சோதனைகளை நடத்தி வந்த நிலையில், இப்போது விக்ரம்-1 விண்ணில் பாய ரெடியாக இருக்கிறது.. இது குறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தானா கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் செய்ய வேண்டிய அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம். விண்வெளியில் விக்ரம்-1 எப்படி செயல்படுகிறது என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
தனியார் ராக்கெட்
சுமார் ஏழு மாடி கட்டிட உயரம் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள லோவர் எர்த் ஆர்பிட் பகுதிக்கு சாட்டிலைட்களை எடுத்து செல்ல உருவாக்கப்பட்டுள்ளது. 350 கிலோ வரை எடையுள்ள சாட்டிலைட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த ராக்கெட், கார்பன் காம்போசிட் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஞ்சின்கள் மற்றும் உயர் சக்தி கொண்ட திட எரிபொருள் மோட்டார்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வானிலையும் தெளிவாக இருப்பதால் ராக்கெட் லாஞ்சில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படும்பட்சத்தில் இது இந்திய தனியார் விண்வெளி துறையில் மிக முக்கியமான ஒரு சாதனையாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.


