இஸ்ஸே சகாவா: பாரிஸ் கொலையும் சட்ட ஓட்டையால் தப்பிய உண்மைக் கதையும் | Issei Sagawa True Crime Story

Spread the love

சொர்போன் பல்கலைக்கழகத்தில் சகாவாவுடன் படித்தவர் ரெனீ ஹார்டெவெல்ட் (Renée Hartevelt) என்ற 25 வயது நெதர்லாந்து நாட்டு மாணவி. மிகவும் அழகான, கலகலப்பான பெண்ணான ரெனீ, சகாவாவிற்கு ஜெர்மன் மொழி கற்றுக் கொடுத்து வந்தார். 1981 ஜூன் 11-ம் தேதி, ஜெர்மன் கவிதைகளைப் படிப்பதற்கு உதவி தேவைப்படுவதாகக் கூறி, ரெனீயை தனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு இரவு உணவிற்கு அழைத்தார் சகாவா. ரெனீ மேஜையில் அமர்ந்து சகாவாவிற்கு முதுகு காட்டியபடி கவிதைகளைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரெனீயின் கழுத்தில் சுட்டார்.

ரெனீ அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்த இரண்டு நாட்களில் சகாவா செய்த செயல்கள் மனித நாகரிகத்தையே வெட்கப்பட வைத்தன. ரெனீயின் சடலத்தைப் பாலியல் வன்கொடுமை செய்த அவர், அவளது உடலின் பல பாகங்களைப் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு உடல் அழுகத் தொடங்கியதும், மீதமுள்ள பாகங்களை இரண்டு பெரிய சூட்கேஸ்களில் அடைத்து, ஒரு டாக்ஸியை வரவழைத்து ‘பாய்ஸ் டி பொலோன்’ பூங்காவில் வீசிவிட்டுத் தப்பினார். ஆனால், சூட்கேஸில் வழிந்த ரத்தத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, டாக்ஸி ஓட்டுநரின் உதவியோடு சகாவா உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவுடன் எந்தத் தயக்கமும் இன்றித் தனது குற்றத்தை அவர் முழுமையாக ஒப்புக்கொண்டார்.

ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)

ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)

சட்டத்தின் ஓட்டைகளும் விடுதலையும்

இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்து, அதை அவரே ஒப்புக்கொண்ட பிறகும், சகாவா ஒரு நாள் கூடச் சிறைக்குச் செல்லாமல் தப்பினார். இங்கேதான் சர்வதேசச் சட்டங்களின் மிகப்பெரிய குளறுபடி அரங்கேறியது. சகாவாவைப் பரிசோதித்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள், அவர் சட்டபூர்வமாக ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்றும், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியற்றவர் என்றும் அறிவித்தனர். இதனால் அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படாமல், பிரான்ஸில் உள்ள மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

சகாவாவின் செல்வந்தத் தந்தையின் சட்ட முயற்சிகளும், பிரான்ஸ் அரசின் முடிவும் சேர்ந்து, அவர் மீது இருந்த வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் கைவிட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது சொந்த நாடான ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார். ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மாட்சுசாவா மனநல மருத்துவமனையில் சகாவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த ஜப்பானிய மருத்துவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “சகாவாவிற்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை; அவர் முழுமையான சுயநினைவுடன் தான் இருக்கிறார். வெறும் பாலியல் வக்கிரம் காரணமாகவே இந்தக் கொலையைச் செய்துள்ளார்” என்று அறிக்கை கொடுத்தனர்.

சகாவா மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதால், அவரை மனநல மருத்துவமனையில் தொடர்ந்து வைத்திருக்க ஜப்பானியச் சட்டப்படி முடியாது. அதே சமயம், பிரான்ஸ் நீதிமன்றம் ஏற்கெனவே வழக்கை முடித்துவிட்டதாலும், வழக்கின் ஆவணங்களை ஜப்பானுக்கு வழங்காததாலும், ஜப்பானிய காவல்துறையால் அவர் மீது மீண்டும் புதிய வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க முடியவில்லை. இதன் விளைவாக, 1986 ஆகஸ்ட் 12-ம் தேதி சகாவா மருத்துவமனையிலிருந்து தானாகவே வெளியேறி, முழுமையான சுதந்திர மனிதனாக நடமாடத் தொடங்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *