International
oi-Velmurugan P
மாஸ்கோ: ஈரானுக்கு அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை ( doomsday ) அனுப்பி வைத்திருப்பதன் மூலம், ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக ரஷ்யா களம் இறங்கியிருப்பது அமெரிக்காவிற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி மொத்த உலக நாடுகளுமே இந்த போரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.ரஷ்யா ஒருவேளை முழுமையாக களம் இறங்கினால் அமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றங்கள் வரும் வாய்ப்பு உள்ளது. அது பற்றி பார்பபோம்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட நாட்களாக நடந்த சண்டை அண்மையில் முடிவுக்கு வந்தது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிலைமை வேகமாக சரியாகி வருகிறது. இந்த சூழலில் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்து ஈரான் மீது அமெரிக்கா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மொத்தமாக முறிந்தது.

தற்போது அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் தற்போது வளைகுடாவில் தீவிரமாக ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை ஈரான் தற்போது சரமாரியாக தாக்கி வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் உச்சம் அடைந்து வருகிறது.
இதனிடையே அமெரிக்கா-ஈரான் போரில் வேடிக்கை மட்டும் பார்த்து வந்த ரஷ்யா முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின், நாட்டின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். டூபோலெவ்-214 பி என்ற இந்த கண்காணிப்பு விமானம் ‘உலக அழிவு நாள்’ (டூம்ஸ்டே) விமானம் என்று உலக நாடுகளால் அழைக்கப்படுகிறது. போர் அல்லது தேசிய அவசரநிலைகளின் போது, வான்வழியாக இருந்து கொண்டே ஒட்டுமொத்த ராணுவ செயல்பாடுகளையும் வழிநடத்தப் பயன்படும் ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையமாக இந்த விமானத்தை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் மின்னணு போரைச் சமாளிக்கும் ‘ஜாமீங்’ எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் இந்த டூம்ஸ்டே விமானத்தில் இருககிறது.. ரஷ்யாவின் மிக உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரஷ்ய விமானப்படை பிரிவு மட்டுமே இந்த விமானத்தை இயங்கும். அந்த அளவிற்கு விஷேசமான விமானம் ஆகும்.
அமெரிக்காவின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரானுக்கு, ரஷ்யா தனது செயற்கைக்கோள் படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறதாம். அத்துடன் உயர்மட்ட ராணுவ ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த விமானம் உதவி செய்யுமாம். இந்த தகவலை பாதுகாப்பு ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள். ஈரான் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்பதை ரஷ்யா இதன் மூலம் உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.
இதனிடையே ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல்களை தொடங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர், “பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் உடன்பட மறுப்பு தெரிவிக்கிறது. ஈரானை கொடூரமாக தாக்கி அழிப்போம். அமெரிக்கா இனி ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலனாக செயல்படும்” என்று சூளுரைத்துள்ளார்.
இதனிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுவெளியில் தோன்ற உள்ளதாக ஈரான் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் நினைவேந்தல் கூட்டம் இன்று டெஹ்ரானில் உள்ள மொசல்லா தொழுகை மைதானத்தில் நடைபெற போகிறது. அப்போது புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் சார்பாகவே இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால், அவர் முதன்முறையாக இதில் நேரில் கலந்து கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்ற உள்ளார்.
ஈரான் அமெரிக்கா போர் ஓய்ந்து இருந்த காரணத்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது.ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளதால், மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.ஹார்முஸ் நீரிணையில் பயமில்லாமல் இந்திய கப்பல்கள் வரும் நிலையை அமெரிக்கா ஈரான் நாடுகள் உருவாக்காமல் விட்டால், அது இந்தியாவில் மீண்டும் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தும். மீண்டும் சிலிண்டர் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் வளைகுடா நாடுகளுக்கு போக வேண்டிய ஏற்றுமதியும் தடைபடும். இந்தியாவை இது கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தியா இந்த போரால் கவலை அடைந்துள்ளது.
மறுபுறம் அமெரிக்கா நினைத்தே பார்க்க முடியாத மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள போகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் இதுவரை நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்களை, ஈரான் சமாளிக்க முடியாமல் திணறியதற்கு, மின்னணுப் போர் ஜாமிங் தொழில்நுட்பம் மற்றும் மிகத் துல்லியமான செயற்கைக்கோள் படங்கள் இல்லாதது தான். ஆனால் டூம்ஸ்டே விமானத்தின் மூலம் ரஷ்யா நேரடியாக வழங்குகிறது. இதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தி காலி செய்ய நினைக்கும் அமெரிக்கா, கடும் சவாலை எதிர்கொள்ள போகிறது.

