“தங்கம் விலை நிச்சயம் ஏறும்’ – இதுதான் ஈரான் போர் தொடங்கியதும் பல பொருளாதார நிபுணர்கள் நினைத்த ஒன்று.
ஆனால், மாறாக, ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சரியத் தொடங்கியது. இதற்கு மிக முக்கிய காரணம் கச்சா எண்ணெயும், அமெரிக்க டாலரும்.
ஈரான் போர் தொடங்கியதும் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் வாங்க டாலர் தேவை என்பதால், அமெரிக்க டாலர் பக்கம் எல்லா முதலீடுகளும் திரும்பின.
இதனால், தங்கம் பெருமளவு விற்கப்பட்டது. விளைவு, தங்கம் விலை குறையத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, இந்திய நேரப்படி, மதியத்திற்கு மேல் தான், ஈரான் போர் தொடங்கியது.
தங்கத்தின் அன்றைய விலை சென்னையில் கிராமுக்கு ரூ.15,200… பவுனுக்கு ரூ.1,21,600.
போர் தொடங்கியது சனிக்கிழமை. பொதுவாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை ஏறாது. ஆனால், போர் காரணமாக, அந்த ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை ஏறியது.
கடந்த மார்ச் 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15,775-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,26,200-க்கும் விற்பனை ஆனது.