ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு காரில் டி.என்.பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு அருகில் கார் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் மனோஜ்குமார் காரை இடதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், சாலையோரம் நின்றிருந்த 15 பெண் தொழிலாளர்கள், ஒரு கல்லூரி மாணவர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒரு ஆண் என மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் மக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்த கடை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.