முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்… இனி கேள்விகளும் அதற்கு தமிழிசை சவுந்தரராஜனின் பதில்களும்..!
“தேர்தலில் பா.ஜ.க-வின் தோல்விக்கு அண்ணாமலையை ஓரம்கட்டியது தான் காரணம் என சொல்கிறார்கள்? அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது தான் பா.ஜ.க கூட்டணி எடுபடாமல் போனது என பலரும் சொல்கிறார்களே?”
“இதற்கு பல தலைவர்கள் பதில் சொல்லிவிட்டார்கள்.
நீங்கள் சொன்ன அந்த வெளியேறியவருக்கு, பெயர் வாங்க வைத்தது எங்கள் கட்சி. அதனால் அவர் எங்களுக்கு வெளியேறியவர் தான். தனி ஹெலிகாப்டர் கொடுத்து 80 தொகுதிகளுக்கு மேல் போக வைத்து பிரசாரம் செய்தது அவருக்கு எடுபடவில்லையா.
அவரே போட்டி போடுவதற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் புறந்தள்ளுகின்றோம் என்ற ஒரு கதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனை எங்களுடைய மாநிலத் தலைவர் மற்றும் மகளிர் அணி தலைவர் வானதி அவர்கள் சொல்லிவிட்டார்கள். எங்களுடைய கட்சியில் 10 ஆண்டுகள் ஆன பிறகுதான் ஒருவர் மாநிலத் தலைவராக முடியும் என்ற வழிமுறைகள் உள்ளது. இன்றைக்கு சொல்கிறார்கள் புறந்தள்ளுகிறோம் என்று.
ஆனால் ஒரு இளைஞர் வந்திருக்கிறார் என்று எங்களுடைய கட்சியின் கட்டமைப்பை புறந்தள்ளிவிட்டு அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்து இருந்தோம். மூன்று ஆண்டுகள் முழு சுதந்திரம் கொடுத்து, கூட்டணியை முடிவு செய்கின்ற சுதந்திரம் கொடுத்திருந்தோம்.
ஏன் உங்களால் சாதிக்க முடியவில்லை…
இவ்வளவையும் நாங்கள் கொடுத்த பின்பு ஏன் உங்களால் சாதிக்க முடியவில்லை. கட்சி உங்களுக்கு முழு கட்டமைப்பை கொடுத்தது. அதன் மூலம் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும்.
இந்த இயக்கம் ஒரு ஆலமரம் போன்ற இயக்கம். அந்த ஆலமரத்திலிருந்து சில இலைகள் விழுவதினால் இந்த இயக்கம் நிச்சயம் பட்டு போகாது. இந்த இயக்கம் துளிர்த்து துளிர்த்து தான் வரும். நான் இந்த இயக்கத்தில் 28 ஆண்டுகளாக இருக்கிறேன்.
ரமேஷ் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது, ரத்த வெள்ளத்தில் அவரை நான் பார்த்தேன். அவர் பா.ஜ.க-வில் பணியாற்றினார் என்பதற்காக அவரை நான் சந்தித்தேன். பாடி சுரேஷ் அவருடைய இரண்டு குழந்தைகளை பார்க்க போகிற நேரத்தில் வெட்டிக் கொன்றார்கள். இப்படிப்பட்ட சவால்களை கடந்து வந்த இயக்கம் இது.
பா.ஜ.க-வின் வாக்கு சதவீதத்தை மட்டுமே வைத்து பா.ஜ.க-வின் வளர்ச்சியையோ, பலத்தையோ தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் எங்களால் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடிகிறது. திரிபுராவில் எங்களால் வெற்றி பெற முடிகிறது. தமிழகத்தில் திராவிட கழகங்கள் பலமாக இருந்ததனால் எங்களால் வெற்றிப் பெற முடியவில்லை என்பதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.
2014 ஆம் ஆண்டில் திமுக, அதிமுக அல்லாமல் நாங்கள் ஒரு கூட்டணி அமைத்து 18.5% வாக்குகளை பெற்றிருந்தோம்.