உங்களுக்கு மசாலா.. எனக்கு ரிசல்ட் முக்கியம்! தமிழ்நாடு குறித்த கேள்வி! சந்திரபாபு நாயுடு ரியாக்‌ஷன் | Andra Cm Chandrababu Naidu replies TN Investment related quesiton – You want masala I want results

Spread the love

India

oi-Mani Singh S

விஜயவாடா: விரிவாக்க திட்டங்களுக்கு வாகன உற்பத்தி நிறுவனங்களும் டெக் நிறுவனங்களும் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, உங்களுக்கு மசாலா வேண்டும் எனக்கு ரிசல்ட் வேண்டும் என்று பதிலளித்துள்ளார். முதலீடுகள் தொடர்பான கேள்விக்கு சந்திரபாபு நாயுடு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தபிறகு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திராவுக்கு இணையாக போட்டியிட முடியாமல் திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னனி நிறுவனங்கள் தங்கள் ஆலையின் விரிவாக்க பணிகளுக்கு தமிழகத்தை விட ஆந்திராவுக்கே முன்னுரிமை கொடுத்து அங்கே முதலீடுகள் செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Andra Cm Chandrababu Naidu replies TN Investment related quesiton - You want masala I want results

சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி

இது தொடர்பாக விஜய் அரசுக்கு தொழில் துறை நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, ஆந்திராவில் தொழில் முதலீட்டாளரகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆந்திராவில் விரிவாக்கத்திற்கான முதலீடுகளை செய்து வருகின்றன.

மாநிலத்தின் தொழிற்சாலைகளை முதலீடுகளை தக்க வைப்பதில் அரசியல் தலைமைக்கும் அரசியல் செயல்பாட்டுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது? விரிவாக்க திட்டங்களை ஈர்ப்பதில் ஆந்திரா தமிழ்நாட்டை விட எந்தெந்த அம்சங்களில் சிறப்பாக செயல்படுகிறது? என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

உங்களுக்கு மசாலா.. எனக்கு ரிசல்ட்

உங்களுக்கு எப்போதுமே மசாலா (பரபரப்பான செய்திகள்) தேவைப்படுகிறது. எனக்கு முடிவுகள்தான் முக்கியம். இதில் முரண்பாடுகள் இருக்கின்றன. மாநிலங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன. முதலீட்டாளர்களுக்கு என்று தனிப்பட்ட தேர்வுகள் உள்ளன. முதலீடுகளை எப்படி ஈர்ப்பது என்பது எனக்கு தெரியும். அதனால்தான் இப்போது அல்ல. 31-வது உச்சி மாநாட்டில் 8 மாநாடுகளை நான் நடத்தியுள்ளேன்.

இன்று அனைவரும் 1995 காலக்கட்டத்தை பற்றி பேசுகிறார்கள். அப்போது தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்பட மக்கள் அச்சப்பட்டார்கள். தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் பணக்காரர்களுக்கு ஆதரவானவர்கள் என்ற முத்திரையை குத்துவார்கள். இன்றும் கூட விசாகப்பட்டினத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வழங்குவது பற்றி பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

திட்டமிட்டு அணுக வேண்டும்

நீங்கள் அதை கொடுக்காவிட்டால் தொழிற்சாலைகள் வராது. ஆரம்பத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் தருகிறோம். பின்னர் தொழில்துறை சூழல் வளர்ச்சி அடைந்ததும் அதை குறைக்கிறோம். அதன்பிறகு நிறுவனங்கள் தானாகவே முதலீடு செய்ய முன்வரும். நம் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டிய அணுகுமுறை இதுவாகும். ஒவ்வொரு விஷயத்திற்கு ஒரு யுக்தி இருக்கிறது.

இந்த அரசு அந்த யுக்திகளின் அடிப்படையில் போகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் முதலீட்டாளர்கள் பரிசீலிக்கிறார்கள். தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருக்கும் மாநிலத்தில் முதலீடு செய்கிறார்கள்” என்றார்.

ஆந்திராவை விட தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்கும்

சந்திரபாபு நாயுடுவின் கருத்து குறித்து தவெக நிர்வாகி சத்யகுமார் கூறுகையில், தமிழக மக்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் உழைப்பால் தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான அரசு முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதியாக இருக்கிறது. விஜய் ஆட்சியில் ஆந்திராவை விட தமிழ்நாடு அதிக முதலீடுகளை ஈர்க்கும்’ என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *