சபரிமலை: பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு; தபால் மூலம் அரவணை அனுப்பவும் வசதி | Sabarimala: Free insurance cover of Rs 2 lakh for devotees; facility to have ‘Aravana’ sent via post

Spread the love

மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் பக்தர்களுக்காகப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சபரிமலை தரிசனத்திற்காக ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் தரிசன முறையில் முன்பதிவு செய்து வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் எவ்விதக் கட்டணமும் இன்றி காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படும்.

இதற்காக தேவசம் போர்டு சார்பில் ரூ.1.5 கோடி பிரீமியம் செலுத்தப்படுகிறது. சன்னிதானத்திற்கு வருவதற்கு முந்தைய நாள் முதல் மொத்தம் மூன்று நாட்களுக்கு இந்தக் காப்பீடு செல்லுபடியாகும். பயணத்தின் முதல் நாளில் விபத்து மரணத்திற்கும், சன்னிதானத்திற்கு வரும் நாள் மற்றும் அதற்கு அடுத்த நாளில் இந்தக் காப்பீடு செல்லுபடியாகும். விபத்து மரணம் மட்டுமின்றி மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இது தொடர்பான உதவிகளுக்கு பம்பையில் தனி உதவி மையம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் பக்தர்கள் வாங்கும் அரவணை மற்றும் அப்பம் பிரசாதங்களை சொந்த ஊர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்ல அஞ்சல் துறை உதவ முன்வந்துள்ளது. இதற்காக பிரசாத கவுன்டர்களுக்கு அருகிலேயே தபால் அலுவலகம் செயல்படும். பார்சல் மூலம் அனுப்பப்படும் பிரசாதம் சிறிதும் சேதமடையாமல் பக்தர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை தபால் துறை உறுதி செய்யும்.

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படும்போது 50 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டிருக்கும். வெல்லம் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை. மராமத்துப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மலை ஏறும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக நீலிமலைப் பாதையில் 200 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல்லில் ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் கூலர் வசதியுடன் கூடிய இரண்டு பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பாச்சிமேடு ஓய்வெடுக்கும் இடமும் அழகுபடுத்தப்பட உள்ளது. கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிக்க டெண்டர் விடப்படும் வரை தேவசம் போர்டே நேரடியாக நிர்வகிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *