உதயநிதிக்கு ஆப்பு வைத்த கருணாநிதி & ஸ்டாலின்..? கைதுக்கு பின்னால் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் இணைத்து அவதூறாக பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சட்டப்பிரிவு.

உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பிரிவுகளில், தமிழ்நாடு பெண்கள் தொல்லை தடுப்புச் சட்டம், 1998-ன் பிரிவு 4 இடம்பெற்றுள்ளது. இந்தச் சட்டம் உருவான வரலாறும், பின்னர் அதில் செய்யப்பட்ட திருத்தங்களும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

1998-ஆம் ஆண்டு, சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா உயிரிழக்க காரணமான ஈவ்-டீசிங் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான இத்தகைய தொல்லைகளைத் தடுக்கும் நோக்கில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு ஈவ்-டீசிங் தடுப்புச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.

காலப்போக்கில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களையும் உள்ளடக்கும் வகையில், அந்தச் சட்டத்தின் பெயர் ‘தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்’ என மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு இந்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களை கொண்டு வந்தது. திருத்தப்பட்ட விதிகளின்படி, பிரிவு 4-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல் முறையே அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால், ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதி தலைமையிலான அரசு இயற்றிய சட்டமும், பின்னர் மு.க.ஸ்டாலின் அரசு மேலும் வலுப்படுத்திய அதே சட்டத்தின் கீழ் தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம், கைது விவகாரத்தில் சட்ட மற்றும் அரசியல் கோணங்களில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *