விஜய் அரசுக்கு நெருக்கடியா? கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை! – Kumudam

Spread the love

முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?

தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்தவும், சட்டப்பேரவையில் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் விவகாரங்கள் குறித்தும் முதல்வர் விஜய் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவையில் தவெகவின் பலம் என்ன?

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் தவெகவின் பலம் 107-ஆகக் குறைந்தது.

இதையடுத்து நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதால் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்தது. இதற்கிடையே, கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது அந்த எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது.

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசனையா?

ஏற்கெனவே, தவெக எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்தியிருந்தார். அப்போது சட்டப்பேரவை நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கியதாகக் கூறப்பட்டது.

தற்போதைய கூட்டத்தில் கொளத்தூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு மாத ஆட்சிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், இடைத்தேர்தல் எனப் பல முக்கிய விவகாரங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளன. இந்தச் சூழலில் விஜய் நடத்தும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *