எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு, அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், “அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும்.