
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் உள்ள உவர் நிலத்தில் உப்பு நீரைக் கொண்டு மண்ணின் தன்மைக்கேற்ப நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது வேளாண்மை அதிகாரிகளின் ஆலோசனையுடன் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.
இந்த சாகுபடி குறித்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண்மை தோட்டக்கலை அதிகாரிகள் விரிவாக விளக்கினர். “கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களான சோதியக்குடி, கோபாலசமுத்திரம், முதலைமேடு, அளக்குடி, சந்தப்படுகை, வடரங்கம், அகர எலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் தோட்டக்கலைப் பயிர்களான வெண்டை, கொத்தவரை, கத்தரி, மிளகாய், கீரைகள், கொடிவகை காய்கறிகள் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகின்றன.
உப்பு நீரில் சாகுபடி!
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படாததால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரும் உப்பாகி நிலமும் உவர் நிலமாகிவிட்டது. இதனால் திருமைலாடி, அளக்குடி, சந்தப்படுகை, முதலமேடு ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களின் உப்புதன்மை அதிகரித்துவிட்டது. சாதாரணப் பயிர்கள் உப்புநீரில் வளராது என்றாலும் குறிப்பிட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மரங்களை முறையான மேலாண்மை மூலம் உப்புநீரிலும் வெற்றிகரமாக சாகுபடி செய்யமுடியும்.
மேலும் உப்பு நீருள்ள உவர் நிலங்களில் அதிக உப்புத்தன்மையைத் தாங்கி வளரும் பழச்செடிகளான சப்போட்டா, பேரீச்சை, நெல்லி, விளாம்பழம் போன்ற பயிர்களைப் பயிரிடலாம். காய்கறி பயிர்களில் கத்தரி, கீரை வகைகளை சாகுபடி செய்யலாம். தக்காளி வகைகளில் உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடிய அபிநவ் ரோகினி மற்றும் வெண்டையில் அர்கா அனாமிகா மற்றும் அர்கா அப்கே போன்ற ரகங்களைப் பயிரிடலாம்.
மலர் பயிரில் மல்லிகை, அரளி, சாமந்தி, மஞ்சள், கனகாம்பரம் போன்றவையும் உப்புத்தன்மையைத் தாங்கி வளரும் பயிர்களாகும். உப்புநீர் சாகுபடிக்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகச்சிறந்தது. இது வேர்ப்பகுதிக்குத் தேவையான அளவு நீரை வழங்குவதால் மண்ணில் உப்பு படிவது குறைகிறது. நிலத்தில் அதிகளவு தொழு உரம், மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் சேர்க்க வேண்டும். இது மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி உப்பின் வீரியத்தைக் குறைக்கும்.
மண், தண்ணீர் பரிசோதனை அவசியம்
விவசாயிகள் சாகுபடிக்கு முன்பு, உங்கள் பகுதி மண் மற்றும் தண்ணீரை கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும். அதில் உள்ள உப்பின் அளவு மற்றும் சோடியத்தின் அளவைப் பொறுத்து எந்தப் பயிரைத் தேர்வு செய்யலாம் என முடிவு செய்யவேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெறலாம்” என்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள், அதிகமாக நீரில் கரையக்கூடிய உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அது உவர் நிலம் என்று சொல்லப்படும். பெரும்பாலும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், கால்சியம் குளோரைடு, மக்னீசியம் சல்பேட் போன்ற உப்புக்கள் நிறைந்திருக்கும். இதனால் வேர்களின் நீர் உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும். அவ்வாறு சிரமப்பட்டு உறிஞ்சும்போது உப்புக்களும் அதிகளவு உறிஞ்சப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
மண்பரிசோதனை மூலம் உவர் தன்மையின் அளவைக் கண்டறிந்து நிலத்தை புழுதிபட உழுது தயார் செய்யவேண்டும். வயலை 30 சென்ட் அளவு கொண்ட சிறு சிறு பாத்திகளாகப் பிரித்து முதல் பாத்தியின் நான்கு பக்கங்களிலும் 30 செ.மீ கொண்ட ஆழமான வடிகால் வாய்க்கால் அமைக்கவேண்டும். பின் மத்திய வடிகால் பக்க வடிகால் வாய்க்கால் அமைத்து மத்திய வடிகால் வாய்க்காலை முக்கிய வடிகால் வாய்க்காலுடன் இணைக்கவேண்டும்.
தக்கைப் பூண்டு விதை நடவு
வாய்க்கால் பாசன நீரை வயலில் கட்டி 48 மணி நேரம் வைத்திருந்து இயற்கையாக கசியவைத்து வடியச்செய்யவேண்டும். வயலில் தண்ணீர் கட்டி நிறுத்திய பிறகு வடிப்பதை இரண்டு அல்லது மூன்று முறை செய்யவேண்டும். பின்னர் ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து 40 நாள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும். தக்கைப்பூண்டு விதைக்க முடியாத நிலையில் பசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்யவேண்டும். அத்துடன் சிபாரிசு செய்யப்பட்ட அளவு சர்க்கரை ஆலைக்கழிவை ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
பின்னர் உவர் நிலங்களில் உப்புத்தன்மையைத் தாங்கிவளரக்கூடிய நெல், பருத்தி ரகங்கள் மற்றும் தோட்டப்பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை ஆகியவற்றைப் பயிரிடலாம். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். உவர் மண்ணை சீர்திருத்தம் செய்வதோடு உர நீர் நிர்வாக முறைகளைச் சரியான முறையில் கடைப்பிடிக்கவேண்டும். இவ்வகை நிலங்களைக் கண்டு விவசாயிகள் மனம் தளராமல் விஞ்ஞான ரீதியில் நல்ல விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்யலாம்” என்றனர்.
தடுப்பணை கட்ட வேண்டும்
உவர் நில விவசாயிகளிடம் பேசினோம். “கடல் நீர் கொள்ளிடம் ஆற்றின் மூலம் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்பாக மாற்றுவதோடு, நிலங்களும் உவர் நிலங்களாகிவிடுகின்றன. இதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்றபடி பல வருடங்களாகப் போராடி வருகிறோம். எங்கள் வேதனையும் கோரிக்கையும் அரசின் கவனத்திற்கே செல்லவில்லை. இருப்பினும் வேறு வழி தெரியாத நாங்கள் வேளாண் அதிகாரிகள் ஆலோசனையுடன் உவர் நிலத்தை சரி செய்து அதில் வளரக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறோம்.
இந்தச் சூழலிலும் மேட்டூர் அணையில் நீர் முழுக்கொள்ளவை எட்டி அணையின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் பல லட்சம் கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில்தான் திறந்து விடப்படுகிறது. இதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் வருடா வருடம் இந்தப் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். இதற்கும் அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இப்போதைக்கு பருத்தி, கத்தரி, மிளகாய் மற்றும் மல்லிகை, மஞ் சள் கனகாம்பரம் ஆகியவை சாகுபடி செய்துள்ளோம்” என்றனர். இந்த நிலையில், “சாகுபடி தொடங்கும்
முன்பு மண் பரிசோதனை செய்வதோடு மண்வள அட்டைகள் பரிந்துரைப்படி உரமிட வேண்டும்” என்றபடி நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘நாகை மாவட்டத்தில் நெல், பயறு, எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடிக்குத் தேவையான மண் வளம், நீர்வளம் தேவையான அளவு இயற்கையாகவே உரங்கள், இருப்பதால், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தும்போது மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. விளைபொருட்களின் தரமும் குறைகின்றது.
அதிகளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் தழைச்சத்து அதிகமாகி பூச்சிநோய் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டு பயிர் அறுவடை செய்யும் சமயத்தில் பயிர் சாய்ந்துவிடும் நிலையும் ஏற்படுகிறது. மண்வளத்தைச் சீர் செய்யவும், பூச்சி நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும் மண் ஆய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் உப்பின் தன்மை நிலத்திற்கு நிலம் மாறுபடுவதாலும், பயிர் ரகங்களுக்குத் தேவையான சத்துக்களின் அளவு ரகத்திற்கு ரகம் வேறுபடுவதாலும் மண் பரிசோதனை செய்து பெறப்படும் மண்வள அட்டை உரப் பரிந்துரையின்படி உரமிடும்போது மண் பாதுகாக்கப்படுவதுடன் கூடுதல் மகசூல் பெற இயலும். மண்வளஅட்டையில் மண்ணின் நயம், காரத்தன்மை, அமிலத்தன்மை, உப்பின் அளவு, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண் சத்துக்களின் அளவுகள் தெளிவாகக் குறிப்பிடப்படும். விவசாயிகள் தங்கள் இடவேண்டிய உரங்களின் விபரங்களுடன் சாகுபடி செய்யவேண்டிய பயிர்களின் விபரங்களும் அதில் அளிக்கப்படுகிறது.
மண்ணிற்கு இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்திலுள்ள சத்துக்களின் அடிப்படையில் மேலாண்மை செய்வதால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் மகசூல் பெருகி வருவாயும் அதிகரிக்கும். குறைந்த பட்சம் 3 ஆண்டுக்கு ஒருமுறையாவது மண் பரிசோதனை செய்வது அவசியம். விவசாயிகள் பயிர்சாகுபடி செய்வதற்கு முன் மண் மாதிரிகளைச் சேகரித்து மாவட்டத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்களில் தங்களது மண் மற்றும் நீர் மாதிரிகளுடன் ஆய்வுக்கட்டணம் ரூ.30 செலுத்தி ஆய்வு முடிவுக்கான மண்வள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்’ என அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண் வளத்தை மேம்படுத்த நம்மாழ்வார் காட்டிய வழியையும் விவசாயிகள் பின்பற்றினால் அதிக பலன்கள் கிடைக்குமே…