எங்க சமூகத்துல கல்வியை முழுமையா எல்லாரும் ஏத்துக்கணும் – நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரோஸி! | “In our community, everyone must fully embrace education,” says Rosie, a member of the Narikuravar community.

Spread the love

தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் காடுமலைகளில் நிலையாக இருப்பவர்கள் தவிர பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் நாடோடிப் பழங்குடியினரும் இருக்கின்றனர்.

அவ்வாறு நாடோடிக்குழுகளாக வாழ்ந்து வந்தவர்கள் தான் நரிக்குறவர் பழங்குடியின சமூகத்தினர். இன்று  பேருந்து நிலையங்கள், ஊர்த்திருவிழாக்கள், சந்தைகள் போன்றவற்றில் கைவினையாக செய்யப்பட்ட பாசி மணிகளையும், ஊசி மணிகளைகளையும் விற்று தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நாடோடிகளாக திரிந்தவர்கள் இன்று பலர் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேறி குடியிருப்புகளாக வாழத் தொடங்கியிருக்கின்றனர். அவ்வாறு வண்ணமயமான சிறிய மணிகளை விற்று வாழ்க்கையை ஓட்டினாலும் குறைந்த வருமானமே ஆயினும் தன்னுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் உறுதியோடு வாழும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ரோஸியிடம் பேசினோம். 

“ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மையார் குப்பத்தில் தான் இருக்கிறேன். கடந்த முப்பது வருடத்துக்கும் மேலாக வாரச்சந்தை, திருவிழாக்கள்ன்னு மக்கள் அதிக கூடுற இடங்களில் அலங்காரப் பொருட்களை கையாலயே செஞ்சி விற்பனை செஞ்சி அதுல கிடைக்கிற வருமானத்தை கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

சில வருசத்துக்கு முன்னால என்னோட கணவர் இறந்துட்டார். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உண்டு. இப்போது அவர்கள் தான் என் உலகமாக இருக்கிறார்கள். எங்க காலத்துல ஏழு, எட்டு வயதிலேயே கல்யாணம் செய்து வைத்திடுவார்கள். ஆனால் இப்போ கொஞ்சம் மாறி பிள்ளைகள் பருவமடைந்த பிறகே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அதைப்போல முன்னாடி ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணுவாங்க ஆனா இப்போ பெண்கள் கிட்ட வரதட்சணை கேட்குறாங்க. 

இதனால நிறைய பெண்களோட கல்யாணம் தடைபடுது. சில விசயங்கள் மாறி இருந்தாலும் எங்களோட வறுமை மட்டும் இன்னும் போகல. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் என்னைப்போல பெண்களுக்கு உடல்சத்து எப்படி கிடைக்கும்? உடல்ல சத்துக்குறைபாடு, குடும்பச் சுமை, பணக் கஷ்டம்ன்னு எல்லாத்தையும் தாண்டி தான் வாழ வேண்டிருக்கு.

இங்க எல்லாருக்கும் சாதாரணமா கிடைக்கிற அடிப்படை வசதிக்குக்கூட போராட வேண்டிய நிலைதான் இருக்கிறோம். குடிநீருக்கு தெரு குழாய் வசதிக்கூட இல்லாம தினமும் சிரமப்பட்டு ரொம்ப நடந்து போய் எடுத்து வந்து தான் பயன்படுத்த வேண்டிருக்கு. இதற்காக பல மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் எந்த மாற்றமும் நடக்கல” என்றவர் சிறிது நேரம் இடைவெளிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *