சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போது விஜிலன்ஸ் குழுவினர் அனைத்துத் தளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆவணங்கள் எதுவும் திருடு போகாதபடி பாதுகாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதோடு, பழுதடைந்த சிசிடிவி கேமராக்களும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் தி.மு.க -வை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். யார் யாரையும் காப்பாற்றவில்லை. கண்டிப்பாக யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை பெற்றுத்தரப்படும். யாரும் எதையும் மறைக்க முடியாது.
மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்குகள் ரேண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெண்டர் தொடர்பான மிக முக்கியமான தரவுகளைக் கொண்டவை. இந்தத் தரவுகளின் கூடுதல் பிரதிகள் வேறு இடங்களில் இருப்பதால் அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளே இருக்கும் சிலரின் உதவியோடு இது நடந்திருக்கலாம் என்பதால் காவல்துறை விசாரணை முடிந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.