“அந்த மனசு தான் சார் கடவுள்…’ என்பதற்கு ஏற்ப திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சந்திரா பேக்கரியில் பசியோடு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறார், பேக்கரி உரிமையாளர், சுப்பிரமணியம். கடையில் நுழைந்ததுமே கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம், அவர் கூறிய வரிகள், தொலைக்காட்சியில் அவருடைய பாடல்கள் போன்று கடை முழுவதும் விஜயகாந்தின் தீமிலேயே செட்டப் செய்திருக்கும் இந்தக் கடையின் உரிமையாளர், இந்த அற்புதமான சேவையை கொண்டு வந்த சில மாதங்களிலேயே மக்கள் அதிகமானோர் இந்த சேவையினால் பயன்பெற்று வருகிறார்கள்.
இது போன்று சேவைகளை செய்யவே பெரிய மனசு வேண்டும்… இதைப் பற்றி அந்தக் கடையின் உரிமையாளரான சுப்பிரமணியம் நம்மிடம் பேசுகையில்,
‘எத்தனை குழந்தைகள் வந்தாலும் எப்பொழுது வந்தாலும்…’
“நான் திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தின் உள்ளே இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறேன். இதற்கு முன்பாக இதனுடைய இன்னொரு கிளை வண்ணாரப்பேட்டையில் கேசவன் சந்திரா பேக்கரியாக இருந்தது. இது என்னுடைய இரண்டாவது பிரான்ச் ஆகும். இந்த கடையை தொடங்கி ஆறேழு மாதங்களே ஆகின்றன. நம்ம பேக்கரியில் பொதுவாக மற்ற பேக்கரிகளில் கிடைக்கும் பொருள்களே கிடைக்கின்றன. அது போக… ஸ்பெஷல் என்னவென்றால் பசியினால் வரும் பச்சிளம் குழந்தைகள், எத்தனை குழந்தைகள் வந்தாலும் யாராக இருந்தாலும் எப்போது வந்தாலும் அவர்களுக்கு பால் இலவசமாக கொடுக்கின்றோம்.”