ஐரோப்பிய சமூகத்தின் தாராளவாதக் கொள்கைகளின் மையமாக விளங்கும் ஸ்வீடனில், ஒரு புதிய சட்டம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான, குறிப்பாக மாமன் – மகள், அத்தை – மகன் போன்ற ரத்த சொந்தங்களுக்குள் நடக்கும் திருமணங்களைத் தடை செய்யும் மசோதா, ஸ்வீடன் நாடாளுமன்றமான “ரிக்ஸ்டாக்’-கில் (Riksdag) செவ்வாயன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம், ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதா அல்லது குடியேறிகளின் கலாச்சாரத்தில் தலையிடுவதா என்ற அனல் பறக்கும் விவாதங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம், ‘கௌரவக் குற்றங்கள்’ என்று அழைக்கப்படும் வன்முறைகள், குடும்ப அழுத்தம் மற்றும் கட்டாயத் திருமணங்களைத் தடுப்பதே என்று ஸ்வீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுக்கமான குடும்பக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் இளம் பெண்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகவே இந்தச் சட்டம் பார்க்கப்படுகிறது.

“ஸ்வீடனில், ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை எந்தக் குடும்பமோ, சமூகமோ பறிக்க முடியாது,” என்று அரசின் அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
அரசின் நோக்கம் இதுவென்றாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் வேறுவிதமான கதையைச் சொல்கிறது. குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு பெயர் பெற்ற ‘ஸ்வீடன் டெமாக்ரட்ஸ்’ (Sweden Democrats) கட்சியின் ஆதரவுடன்தான் இந்த மசோதா முன்னெடுக்கப்பட்டது. அக்கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்லி வீமர்ஸ், “இது ஸ்வீடிஷ் மதிப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. இனி இணையான சமூக விதிகளுக்கு இடமில்லை. மரபணு அபாயங்களுக்கு முற்றுப்புள்ளி,” என்று ட்வீட் செய்திருப்பது, இந்தச் சட்டத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இது வெறுமனே ஒரு சமூக சீர்திருத்தமா அல்லது வளர்ந்து வரும் குடியேற்ற எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.