"எனக்கு மட்டும் மகள் இருந்தா…" – MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பதினேழாவது சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

பதினேழாவது சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அரசியல் பயணம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.

அஇஅதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி இவர். கட்சியில் முக்கியப் பதவியான ‘மாநில எம்ஜிஆர் இளைஞரணி’ செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜிஆருக்கு இவர் மீது அளப்பரிய பாசம் உண்டு.

jcd prabakar with mgr
jcd prabakar with mgr

1980 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல். ‘என்ன தவறு செய்தேன்’ எனக் கேட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் சென்றார் எம்.ஜி.ஆர்.

சென்னையில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பிரபாகர் அவரை ஆதரித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்ய வந்தார் எம்.ஜி.ஆர். அந்த நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

‘ஜேசிடி பிரபாகர் நல்லொழுக்கம் நிறைந்தவர். மக்கள் பணியே பிரதானமாக நினைக்கும் தூய தொண்டர்.

எனக்கு மட்டும் இறைவன் குழந்தை பாக்கியம் தந்திருந்தால் அதுவும் பெண் பிள்ளை இருந்திருந்தால் எனது மகளை பிரபாகருக்கு மணமுடித்து கொடுத்திருப்பேன். அப்படிப்பட்ட பிரபாகருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்’ என எம்.ஜி.ஆர் பேசினார்.

அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்கள் கண்கள் கலங்கியபடியே கை தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

அந்தத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார் ஜே.சி.டி

தொடர்ந்து 84 மற்றும் 89 ம் ஆண்டு தேர்தல்களில் அதே வில்லிவாக்கத்தில் நின்று தோல்வியைத் தழுவினார்.

jcd prabakar with jeyalalitha
jcd prabakar with jeyalalitha

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவும் இவருக்கு அதே வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலிலும் வெற்றிதான்.

ஆனால் 2016ம் ஆண்டு மு.க ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அதிமுகவிலேயே தொடர்ந்தவருக்கு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வில்லிவாக்கத்திலேயே போட்டியிட் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் பிரபாகரின் மகன் முதலில் தவெகவில் இணைந்தார். அடுத்த சில தினங்களில் பிரபாகரும் தவெகவில் சேர, அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் விஜய்.

தேர்தலில் வென்றதுடன் நாளை தமிழக 17வது சட்டசபையின் தலைவராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *