நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்துகொள்ளாதது பேசுபொருளான நிலையில் தற்போது அதுகுறித்து அர்ஜுன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “முதலில், அன்ஜனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும் நல்வாழ்த்துகளும் எங்களுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எங்களை நினைத்து வாழ்த்திய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

ஆனால், இதுபோன்ற ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார். ஆனால், ஒரு தந்தையாக, எனது மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.