நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் “மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி,“‘மகுடம்’ திரைப்படம் எங்கள் குழுவிற்குப் பல காரணங்களால் மிக நெருக்கமான படம். அதில் முக்கியக் காரணம், விஷால் முதன்முறையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒருவரது முதல் இயக்கம், முதல் தயாரிப்பு அல்லது முதல் திரைப்படம் என்பவை எப்போதுமே முதல் குழந்தையைப் போலச் சிறப்புக் கவனத்தைப் பெறும்.

அந்த வகையில், இந்தத் திரைப்படத்திற்காகவும் இதன் டிரெய்லர் உருவாக்கத்திற்காகவும் படக்குழுவினர் போட்ட உழைப்பை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அதனால், இந்த டிரெய்லருக்கும் சரி, திரைப்படத்திற்கும் சரி, கிடைக்கவிருக்கும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் விஷால் முற்றிலும் தகுதியானவர்.