`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

Spread the love

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.

கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனாம் கோயில் நில பிரச்னை தொடர்பாகத் துண்டு பிரசுரத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான்தோன்றி மலைப் பகுதியில் மக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த திமுக-வினர் துண்டு பிரசாரம் செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதையடுத்து ஓர் இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீஸார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று கரூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் 50 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில்.

“2021 தேர்தல் சமயத்தில் என்னை பின் தொடர்ந்து வந்து கண்காணித்த சிலர், திமுக-வின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள். இந்த தேர்தலிலும் என்னை கண்காணித்து வருகின்றனர்.

என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை கொலைசெய்ய முயற்சி செய்கிறார்கள். எனக்கோ, என் குடும்பத்தினருக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் நடந்தால் செந்தில் பாலாஜியும், அவர் தம்பி அசோக்குமாரும்தான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

கரூரில் நேற்று கோவில் இனாம் நில பிரச்னைக்காக நோட்டீஸ் வழங்கச் சென்றபோது, என் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அதன் காரணமாக எனக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

களத்தில் சந்திக்கலாம் என்று சவால் விட்ட கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கோவைக்குச் சென்று விட்டார். நான் கரூர் களத்தில்தான் இருக்கிறேன். தோல்வி பயம் காரணமாக அவர் கோவைக்குச் சென்று விட்டார்.

கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஏதேனும் பிரச்னை செய்து, வன்முறையைக் கட்டவிழ்த்து விட தயாராகி வருகின்றனர். எப்படியாவது இந்த தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக-வினர் செயல்படுவதாக ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *