கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் – புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் தேவதர்ஷினி மற்றும் ஒன்றரை வயதில் தேவஜனனி என இரண்டு குழந்தைகள் இருந்தன. நேற்று இரவு சந்திரன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தன் இரண்டு மகள்களுடன் உறங்கியிருக்கிறார் புஷ்பா. சுமார் 10.30 மணியளவில் தன்னை ஏதோ கடித்ததாக உணர்ந்த புஷ்பா, அது என்னவென்று பார்த்திருக்கிறார்.
தன்னை கடித்தது பாம்பு என்று தெரிந்ததும், குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓட நினைத்தார். அப்போதுதான் குழந்தைகளையும் பாம்பு கடித்திருப்பதைப் பார்த்திருக்கிறார். அதையடுத்து தங்களை பாம்பு கடித்துவிட்டது என்று அலறியிருக்கிறார் புஷ்பா. அவரது அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளின் உடல் முழுவதும் விஷம் பரவியிருந்ததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதையடுத்து தாய் புஷ்பாவை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான முறையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனக்கு முதலுதவி அளித்த மருத்துவர்களிடம், `என்னை விட்டுடுங்க. என் குழந்தைகளை எப்படியாவது காப்பாத்திடுங்க…” என்று புஷ்பா கதறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், “இவர்களின் வீடு ஏரிக்கரைக்கு அருகில் உள்ளது. பாம்பு உள்ளே நுழைந்து கடித்திருக்கிறது. கட்டுவிரியன் பாம்பு என்பதால் குழந்தைகளின் உயிர் உடனே பிரிந்துவிட்டது. தாய்க்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.