Tamilnadu
oi-Hema Vandhana
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்ததில் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் தாயும் பாம்பு கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாம்பு கடித்து உயிரிழந்ததை கேட்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நிலை குலைய வைத்துள்ளது..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள போக்கனூர் ஏரிக்கரையோரம் வசிப்பவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு தேவதர்ஷினி (4), தேவஜனனி (2) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி 2 பெண் குழந்தைகள்
நேற்றிரவு புஷ்பா தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த புஷ்பா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் அந்த பாம்பு கடித்துள்ளது. ஒரே நேரத்தில் 3 பேருமே பாம்பு கடிக்கு ஆளானதால் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்ததால் அதிர்ச்சியடைந்த புஷ்பா கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தனர். அப்போது புஷ்பா மற்றும் 2 குழந்தைகளும் பாம்பு கடிக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.
பரிதாப மரணம்
இதையடுத்து தாமதிக்காமல் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளித்தனர். குழந்தைகள் 2 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் முயற்சி செய்தும், சிகிச்சை பலனின்றி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் குழந்தைகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அலறி கதறினார்கள்.. 2 வயது மற்றும் 4 வயதே ஆன பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, புஷ்பாவுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டில் தூங்கும்போது கவனம் தேவை
பாம்பு கடி சம்பவங்கள் வீடுகளிலும் நிகழக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். வீட்டைச் சுற்றி குப்பைகள், தேவையற்ற பொருட்கள் குவிந்து கிடக்காமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.
பாம்பு கடித்தால் வலி அல்லது வீக்கம் குறைவாக இருப்பதாக நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நாட்டு வைத்தியம், மந்திரம் போன்றவற்றை நம்பி மருத்துவ சிகிச்சையை தாமதப்படுத்தக் கூடாது.
கள்ளக்குறிச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகள் கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உடல்நிலை குறித்த தகவல்களையும் குடும்பத்தினர் கவலையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.